தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலுமகேந்திரனிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை, விடுதலை என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் வெளியான படம் விடுதலை. காமெடி நடிகர் சூரி இந்த படத்தில் நாயகனாக அறிமுகமானார். பெருமாள் வாத்தியார் என்ற தீவிரவாதி கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் தங்கை பவானிஸ்ரீ சூரிக்கு காதலியாக நடித்திருந்தார்.
போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் ஜீப் டிரைவாக சூரி நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடல், இளையராஜா குரலில் பெரிய அளவில் வைரலானது. நாயகனாக சூரி நடிப்பும், வாத்தியராக விஜய் சேதுபதி நடிப்பும், போலீஸ் அதிகாரி கேரக்டரில் சேத்தன், கௌதம் மேனன் நடிப்பும் படத்தில் பெரிய பிளஸ் பாயிண்டுகளாக இருந்தன.
கடந்த ஆண்டிலேயே ஆகஸ்ட், செப்டம்பரில் விடுதலை 2 படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஏறக்குறைய 20 மாதங்களுக்கு பிறகு விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாகிறது. விடுதலை , விடுதலை 2 படங்களில் நடித்த பிறகு சூரி கருடன், கொட்டுக்காளி என 2 படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியாகி பல மாதங்களாகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒருவழியாக விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படக்குழு பூசணிக்காய் உடைத்துள்ளது. ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை, விடுதலை 2 படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள், உதவி இயக்குனர்கள். படக்குழுவினர் மைக்கில் பேசி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி 45 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அவர் உருக்கமாக சொன்ன விஷயங்களை கேட்டு இயக்குனர் வெற்றிமாறன் கண்ணீர் விட்டு கலங்கியிருக்கிறார். ஒரு குடும்பமாக 3 ஆண்டுகளாக விடுதலை, விடுதலை 2 படங்களின் படப்பிடிப்பு நீடித்த நிலையில், இறுதி நாளில் அனைவரும் மனபாரத்துடன் நெகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றுள்ளனர்.





