தமிழ் சினிமாவில் மிகத் தரமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென முத்திரை பதித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார்.
ஒரு படத்தில் அழுத்தமான திரைக்கதை அமைத்து அதை வெற்றி திரைப்படமாக மாற்றும் யுக்தியை அவர் கற்று வைத்திருப்பதால், தமிழ் சினிமாவில் வெற்றிமாறனின் மார்க்கெட் மிகப்பெரியது. அதனை பொல்லாதவன் திரைப்படத்திலிருந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் காப்பாற்றி வருகிறார்.
இதில் ஆடுகளம் திரைப்படத்தில் கருப்பு கதாபாத்திரத்திலேயே வாழ்ந்த தனுஷ், தேசிய விருதை உச்சி முகர்ந்தார். இதேபோல், வெற்றிமாறனின் படைப்பான அசுரன் திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. இதற்குப் பிறகு அவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தையே இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இதற்காக லண்டன் நகருக்கு அடிக்கடி சென்று வரும் வெற்றிமாறன், அங்குள்ள தொழில்நுட்பத்தை இங்கு பயன்படுத்துவதற்கான பணிகளில் இறங்கினார். அதேபோல் காளைகளுடன் பயிற்சி மேற்கொள்வதற்கான வேலைகளிலும் சூர்யா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிடைத்த சின்ன இடைவெளியில் விடுதலைப் படத்தை இயக்கப் புறப்பட்டார் வெற்றிமாறன்.
சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி வர இதன் வேலைகள் சூடு பிடித்தன. ஆனால் காட்சிகள் செல்ல செல்ல, அதனை இரண்டு பாகங்களாக இருக்க வெற்றிமாறன் முடிவு செய்தார். இதில் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறுமலையில் இதன் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், குடியரசு தினத்தன்று படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் எஞ்சிய வேலைகள் நிறைய இருப்பதால், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில்தான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போகும் என்பதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.





