அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த புராஜக்டில் இருந்து வெளியேறினார். விக்னேஷ் சிவன் வெளியேறியதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டது. அதாவது அஜித்திற்கு அவர் கூறிய கதை அவ்வளவு வெயிட் ஆன சப்ஜெக்ட் இல்லை எனவும் ஆதலால் அஜித் அவரை நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்பட்டது. இது முதல் காரணம்.

இரண்டாவதாக, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விக்னேஷ் சிவன் முழு கதையையும் முடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு விக்னேஷ் சிவன் வெளியேறியதற்கான காரணங்கள் குறித்து செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்த உண்மைத்தன்மை என்ன என்று தெரியவில்லை. இது குறித்து விக்னேஷ் சிவனிடம் கேட்கப்பட்ட போது அவர் தெளிவான பதிலை கூறவில்லை.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ஓரளவு இது உறுதியான தகவல் என்றே அறியப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்தை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறாராம். ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இந்த கூட்டணி “நானும் ரவுடிதான்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற திரைப்படங்களில் இணைந்திருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தன. இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.





