இயக்குனர் எச் வினோத் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த 3 படங்களுமே வெற்றிப்படங்களாக, அஜீத்குமாருக்கு மகுடம் சூட்டிய படங்களாக அமைந்தன.
அதே போல், கார்த்தி நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தீரன் அதிகாரம் 1. கார்த்திக்கு மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இது அமைந்தது. அதே போல் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கிய படமாக அமைந்தது, சதுரங்க வேட்டை. மோசடி பேர்வழிகளின் வாழ்க்கையை மிக சுவாரசியமான சொன்ன படங்களில் இந்த படம் மிக முக்கியமானது.
இப்படி பல வெற்றிப் படங்களை தந்த எச் வினோத் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், கடந்த ஆண்டின் துவக்கத்திலேயே நடிப்பதாக இருந்தது. அஜீத்குமார் நடித்த துணிவு படத்துக்கு பிறகு, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில், கமல் ஹீரோவாக நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்குவதாக இருந்தது.
ஆனால் இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி, தக்லைப் படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அரசியல் பணி எனத் தொடர்ந்து பல பணிகள் குறுக்கிட்டதால், ஒரு மாதம், 2 மாதம் என எச் வினோத் படத்தை தள்ளிப் போட்ட நடிகர் கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் அடுத்த ஆண்டு 2024 ஆண்டின் இறுதியிலோ, அல்லது 2025 ஆண்டின் துவக்கத்திலோ படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டார்.
பல மாதங்கள் வெயிட்டிங்கில் இருந்து நொந்துபோன டைரக்டர் எச் வினோத், தீரன் அதிகாரம் 2 படத்துக்காக மீண்டும் கார்த்தியை அணுகிய நிலையில், அவர் கால்ஷீட் தரவில்லை. காத்திருக்கமாறு கூறிவிட்டார். இன்னும் சில முக்கிய நடிகர்களை அணுகிய நிலையில், அவர்களும் வெயிட்டிங்கில் எச். வினோத்தை வைத்தனர். இந்த சூழலில் விஜய் தனது கடைசி படமான விஜய் 69 படத்தை இயக்கும் வாய்ப்பை, எச் வினோத்துக்கு தந்தார்.
ஆனால், தி கோட் படப்பிடிப்பை முடித்தவுடன் எச் வினோத் இயக்கத்தில் விஜய் 69 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் 22ல் விஜய் பிறந்த நாளில் ஷூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டது. பிறகு ஆகஸ்ட்டில் என்றனர். பிறகு விஜய் 69 படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கும் என்று கூறிய நிலையில், இப்போது நவம்பரில் என்று கூறப்படுகிறது. இப்படியே காத்திருப்போர் பட்டியலில் நல்ல படங்களை தந்த டைரக்டர் வினோத்தை அடுத்தடுத்து ஹீரோக்கள் வைப்பது, ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





