தமிழில் செம்பருத்தி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ரோஜா. ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இயக்குனர் ஆர்கே செல்வமணி இவரது பெயரை ரோஜா என மாற்றி, செம்பருத்தி படத்தில் நடிக்க வைத்தார். இதில் ஹீரோவாக பிரசாந்த் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாக இருந்தது.
செம்பருத்தி படத்தை தொடர்ந்து நடிகை ரோஜா தமிழில் பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். வீரா உழைப்பாளி தமிழ் செல்வன் இந்து சூரியன் ராசய்யா பரம்பரை ஆயுதபூஜை உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
பிறகு ஒரு கட்டத்தில் ஆந்திராவில் அரசியலில் நுழைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நகரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். கடந்த ஆட்சி காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ரோஜா இருந்தார். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி படுதோல்வி அடைந்தது. ரோஜாவும் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இப்போது சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக இருக்கிறார். நேற்று இரவு ஆந்திராவில் ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச டோக்கன் பெற பக்தர்கள் வரிசையில் காத்திருந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 6 பக்தர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ரோஜா கூறுகையில், புஷ்பா 2 படம் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்ததை போல திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த சம்பவத்துக்கும் தீட்சை செய்வாரா, அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது ஆந்திரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரோஜாவின் கணவர், இயக்குனர் ஆர்கே செல்வமணி, பெப்சி அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





