தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதில் கபடி விளையாட்டை மையப்படுத்தி கில்லி, வெண்ணிலா கபடிக்குழு, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களை சொல்லலாம். இதுதவிர படத்தில் ஒரு காட்சியாக ஏதேனும் திருவிழா கபடி விளையாட்டை மையப்படுத்தி காட்சிகள் வருவதுண்டு.
அதுபோல் கால்பந்து போட்டியை மையப்படுத்தி வந்த பிகில் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து துருவ் விக்ரம், கபடி விளையாட்டை மையப்படுத்திய ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். அதே போல் குத்துச்சண்டையை மையப்படுத்தி பத்ரி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, இறுதிச்சுற்று போன்ற படங்கள் வெளியாகின.
முக்கிய விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டை மையப்படுத்தி தமிழில் ஏராளமான படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. உதாரணமாக 1984, கனா, சென்னை 28, சென்னை 28 இரண்டாம் பாகம், ஜீவா, சமீபத்தில் வெளியான லால் சலாம் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம்.
இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரும் போது, ரசிகர்களுக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்கிற மனநிலைதான் ஏற்படுகிறது. அதுவும் தவிர, விளையாட்டை அதிகமாக விரும்புகிற ரசிகர்கள் கூட, இதுபோன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களை காண்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நிஜமாக நடக்கிற விளையாட்டை பார்ப்பவர்களுக்கு இப்படி திரையில் ஜோடிக்கப்பட்ட விளையாட்டு படங்கள் பிடிப்பது இல்லை.
இந்நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கி விஜய் நடித்துவரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்றும், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷூட்டிங் நடப்பதாகவும், இதில் கிளைமேக்ஸில் மகேந்திரசிங் தோனி கேமியோ ரோலில் வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் 10 மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்படும் பான் இந்தியா படமாகும். இந்த படமும் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைதான் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நிறைய கிரிக்கெட் படங்கள் வந்துவிட்ட நிலையில், அப்பா விஜய் நடிக்கிற படமும், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குகிற படமும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படம்தான் என்பதால், அடப் போங்கப்பா என்று ரசிகர்கள் சோம்பல் முறிக்கின்றனர்.





