நடிகை சுகன்யா, தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமான நடிகையாக இருந்தவர். ரஜினி ஒருவரை தவிர மற்ற எல்லா முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார். மகாநதி, சின்னக்கவுண்டர், வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி, உடன்பிறப்பு, சின்ன மாப்ளே என சுகன்யா நடித்த படங்கள் எல்லாமே வெற்றி படங்களாக இருந்தன.
பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படம் மூலமாக தான் சுகன்யா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில் நயன்தாரா, திரிஷா தனிநாயகியாக நடிப்பது போல், அந்த காலத்தில் சுகன்யா முக்கிய நாயகியாக நடித்த படம் சோலையம்மா.
சுகன்யா நடித்த படங்களில் மிக முக்கியமான படம் இந்தியன். இந்த படத்தில், இந்தியன் தாத்தா கமல் பேசப்பட்ட அளவுக்கு, சுகன்யா கேரக்டர் கவனிக்கப்படவில்லை. வயது முதிர்ந்த பாட்டியாக, சுகன்யா மிக சிறந்த நடிப்பை அதில் தந்திருந்தார். அதே போல் பிளாஸ்பேக் சுதந்திர போராட்ட கால காட்சிகளிலும் சிறந்த நடிகை என்பதை நிரூபித்து இருந்தார்.
மற்ற நடிகைகளை போலவே, சுகன்யா வாழ்விலும் திருமணம் இனிக்கவில்லை. ராஜகோபால் என்பவரை திருமணம் செய்த அவர், சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து விட்டார். இப்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனந்தம் என்ற சீரியல் பல ஆண்டுகளுக்கு முன் மிக பிரபலமாக ஓடியது. டிவி சேனல்களில் நடக்கும் நடனம், பாட்டு நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சுகன்யா பங்கேற்று வருகிறார்.
விஜயகாந் உடன் சுகன்யா நடித்த படம் சின்னக்கவுண்டர். கடந்த 1990களில் வந்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆர்வி உதயகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற, வயிற்றில் தொப்புளை சுற்றி பம்பரம் விடும் காட்சி பயங்கரமான விமர்சனத்துக்கு உள்ளானது. நக்மா வயிற்றில் பிரபுதேவா ஆம்லேட் போட்ட காட்சி, லவ் போ்ட்ஸ் படத்தில் இடம்பெற்றது. இந்த 2 விஷயங்களை பலரும் கிண்டலடித்து, தமிழ் சினிமாவை விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து நடிகை சுகன்யா ஒரு நேர்காணலில் கூறியதாவது, அந்த படத்தில் வரும் காட்சிக்காக, இயக்குநர் சொன்னபடி நான் பம்பரம் விடக் கற்றுக்கொண்டேன். வயிற்றில் பம்பரம் விடும் காட்சியிலும் நடித்தேன். அந்த காட்சியில் ஆபாசமாக எனக்கு எதுவும் தெரியவில்லை. அந்த காட்சியில் நடிக்க ஒத்திகை எல்லாம் நடந்தது. அதற்காக 3 அசிஸ்டெண்டுகள் என்னுடன் இருந்தனர். முதலில் எனக்கு பயமாக இருந்தது. ஒருவழியாக என்னை சம்மதிக்க வைத்து, நடிக்க வைத்து விட்டனர், என்று கூறியிருக்கிறார்.





