தமிழ் சினிமாவில் இப்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா, விஜயா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, டாப் லெவல் ஹீரோவாக மாறியிருக்கிறார் நடிகர் விஜய். ரஜினியே காக்கா – கழுகு கதை சொல்லும் அளவுக்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், நான் தளபதியாக இருந்து விடுகிறேன் என, விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட சிகரத்தை தொட்ட நிலையில் இருக்கும் நடிகர் விஜய் படத்தை இயக்க டைரக்டர்களும், தயாரிக்க தயாரிப்பாளர்களும் தவம் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய் நடித்த படம் பிளாப் ஆனால் கூட, தயாரிப்பாளருக்கு நஷ்டம் தராது என்ற அளவுக்கு, விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் மாஸ் இருக்கிறது.
லியோ படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றாலும், விமர்சன ரீதியாக திருப்தி அளிக்கவில்லை. அதனால் ஜாலியான ஒரு படம் பண்ணலாம் என்று யோசித்த விஜய், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு தனது படத்தை இயக்க வாய்ப்பளித்தார். ஆனால் வெங்கட்பிரபு தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்பதே இப்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
ஏனெனில் ஏப்ரல் 14ம் தேதி, தி கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியானது. இந்த பாட்டு ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. விஜய் பாட்டு மாதிரி துள்ளலாக, உற்சாகமாகவே இல்லையே என ரசிகர்கள் புலம்பினர். அடுத்து, விஜய் பிறந்த நாளன்று ஜூன் 22ம் தேதி, சின்ன சின்ன கண்ணிலே என்ற பாடல் வெளியானது. இதிலும் யுவன் சங்கர் ராஜா பெரிய மேஜிக் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு 3வது சிங்கிள் பாடல் வெளியானது. அவ கண்ணால பார்த்து ஒரு ஸ்பார்க்கு என்ற இந்த பாடலை, கங்கை அமரன் எழுதியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா, விஜய்க்கு பாடியிருக்கிறார். இந்த பாடல் கேட்பதற்கு கூட நன்றாக இருந்தாலும், பெரிய அளவில் பாட்டில் ஈர்ப்பு இல்லை. இசையும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
அதுமட்டுமின்றி இந்த பாடல் காட்சியில் தோன்றும் விஜயை பார்த்தால், ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு மீது பயங்கர எரிச்சலும், கோபமும்தான் வருகிறது. டீஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜயை இளமையாக காட்டுகிறேன், என அவரது அழகான தோற்றத்தையே அலங்கோலம் செய்திருக்கின்றனர். அவரது மீசை, தாடி, தலைமுடி எல்லாம் அவரது தோற்றத்தை, கம்பீரத்தை சிதைத்திருக்கிறது. அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் வெங்கட்பிரபு என்பதை, விஜயை இப்படி கோமாளி போல காட்டி, தன் வெறியை தீர்த்துக்கொண்டார் என்று தளபதி ரசிகர்கள் அப்செட் ஆகி கமெண்ட் செய்து வருகின்றனர்.





