தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினியா என்பதுதான். இரண்டு பேரின் ரசிகர்களுமே கடந்த சில மாதங்களாகவே இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதித்துவந்தனர். அந்த விவாதம் மோதலாக மாற அடித்தளமிட்டது ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஹுக்கும் பாடல்தான். அதில் இடம்பெற்ற வரிகள் விஜய்யை நேரடியாக தாக்குவதுபோல் இருப்பதாக கூறப்பட்டது.
அதோடு அந்த பிரச்னை முடியும் என்று எதிர்பார்த்தால் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா,கழுகு கதை இந்தப் பஞ்சாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றது. ரஜினி இப்படி பேசியது வரவேற்கத்தக்கது என அவரது ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடினாலும் சினிமாவில் மூத்த கலைஞரான அவர் இப்படி இறங்கி வந்து பேசியிருக்கக்கூடாது அது அவரது அனுபவத்துக்கு அழகு இல்லை என ஒருதரப்பினர் விமர்சனத்தை வைத்தனர்.
அதெசமயம் அந்த விழாவில் பேசியதற்கு விஜய் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் விஜய் அப்படி எதுவும் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ரஜினிதான் அவருக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ரஜினியின் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் கடந்து சென்று தான் பக்குவப்பட்ட மனிதர் என்பதை காட்டுவார் எனவும் திரை ஆர்வலர்களில் சிலர் கூறுகின்றனர்.
இதுவரை சமூக வலைதளங்களில் மட்டுமே ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்தனர். இப்போது விஜய் ரசிகர்களோ ஒருபடி மேலே சென்று போஸ்டரில் இந்தப் பிரச்னையை கொண்டு வந்திருக்கிறார்கள். மதுரையில் விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டரில், விஜய்யின் புகைப்படத்தை இடது பக்கம் வைத்து அவர் ரஜினியை பார்த்து, என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம் என கூறுவது போல் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தப் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் ரசிகர்களின் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் அதற்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகின்றனர். அதேபோல் உங்களுக்கு மட்டும்தான் போஸ்டர் அடிக்க தெரியுமா நாங்களும் போஸ்டர் அடிப்போம் என கூறி ஒருவேளை விஜய்க்கு எதிராக போஸ்டர்களை அவர்களும் அடிக்க ஆரம்பித்தாலும் இந்தப் பிரச்னை சிந்துபாத் கதை போல் நீளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே ரஜினியும், விஜய்யும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என நடுநிலையாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகிறது. வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இன்று முதல் இந்தியாவிலும் தொடங்கியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு இடையே படம் வெளியாகவிருப்பதால் ஒட்டுமொத்த கோலிவுட்டும் இந்தப் படத்தின் ரிசல்ட்டைத்தான் எதிர்பார்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





