சினிமாத்துறை சார்ந்தவர்கள் என்றாலே, கோடிகளில் புரள்பவர்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சில நூறு சம்பளம் வாங்கும் தினக்கூலி துணை நடிகர்களும், திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் இருக்கவே செய்கின்றனர். வடிவேலுவுடன் காமெடி துணை நடிகர்களாக நடித்த அல்வா வாசு, பாவா லட்சுமணன், வெங்கல் ராவ், போண்டா மணி கூட பெரிய அளவில் வசதியாக வாழவில்லை.
போண்டாமணி, அல்வா வாசு போன்றவர்கள் கடைசி காலகட்டத்தில் மருத்துவ செலவுக்கு கூட மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். சமீபத்தில் உடல் நலம் பாதித்த வெங்கல் ராவ், பாவா லட்சுமணனுக்கு கூட மற்ற நடிகர்கள் உதவியை காண முடிந்தது. பழம்பெரும் காமெடி நடிகர் டிஎஸ் பாலையா மகன் ஜூனியர் பாலையா, கடைசி காலத்தில் வாடகை வீட்டில் மருத்துவ செலவுக்கு கூட வசதியின்றி தவித்திருக்கிறார்.
அதனால் சினிமா துறை சார்ந்த பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர்கள் பெரிய அளவில் வசதியானவர்களாக இல்லை. வாடகை வீட்டில் வாழ்பவர்களாக இருந்துள்ளனர். இது நடிகர்களுக்கு மட்டுமல்ல, இயக்குனர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக போன்ற அற்புதமான குடும்ப கதைகளை படமாக்கி தந்தவர் இயக்குனர் ராசுமதுரவன்.
கவந்த 2013ம் ஆண்டில், உடல் நலம் பாதித்த நிலையில் ராசு மதுரவன் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு, திரைத்துறை தரப்பில் இருந்து அவரது குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் வறுமையில் கஷ்டப்படுகின்றனர். பள்ளி கட்டணம் கூட பணமின்றி சிரமப்படுவதாக, இயக்குனர் ராசு மதுரவனின் மனைவி சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த தகவலை பத்திரிகையில் படித்து தெரிந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், ராசு மதுரவனின் மகள்கள் இருவரது படிப்பு செலவுக்கான கட்டணம் ரூ. 97 ஆயிரம் செலுத்தியுள்ளார். இப்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அந்த குடும்பத்துக்கு ரூ 1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் சங்க பொருளாளர் பேரரசு தெரிவித்துள்ளார்.
ஆனால் சிவகார்த்திகேயன், ராசு மதுரவன் இயக்கத்தில் நடித்தது இல்லை. ஏஆர் முருகதாஸூக்கும், ராசு மதுரவனுக்கும் பழக்கமே இல்லை என்ற போதிலும், ஒரு நல்ல இயக்குனரின் குடும்பம், அவரது மறைவுக்கு பின்னால் வறுமையில் துன்பப்படுகிறது என்று அறிந்தவுடன் ஓடிச்சென்று இருவரும் உதவியிருக்கின்றனர். இதற்கு உதவி செய்யும் மனசுதான் வேண்டுமே தவிர, அறிமுகம் தேவையில்லை என்று வெளிக்காட்டி உள்ளனர். ஆனால் ராசு மதுரவன் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் சீமான், பொன்வண்ணன். தருண்கோபி, நட்டி என்கிற நடராஜ், இளவரசு போன்றவர்களும் உதவ முன்வந்தால் அந்த குடும்பத்தின் வறுமை நீங்கும்.





