நடிப்பை கைவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார் தளபதி விஜய். தற்போது நடித்து முடித்திருக்கும் கோட் மற்றும் அடுத்த திரைப்படத்தோடு அவர் மொத்தமாக சினிமாவை கைவிட இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்திருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு எடுத்துள்ளார்.
ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இருந்து தற்போது வரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. அனேகமாக வரும் வாரத்தில் இதற்கான ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல செப்டம்பர் 5ஆம் தேதி கோட் வெளியாவதால் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி இன்னும் திரைத்துறை வட்டாரத்தில் சுற்றிக்கொண்டு தான் வருகிறது. இதில் அட்லி, வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர் அடிபட்டது. இந்த நிலையில் இறுதியாக எச் வினோத்தின் கதையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வினோத் ஏற்கனவே கமலுடன் இணைந்து ஒரு இயக்குவதற்கு தயாரானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் களத்தில் இந்த படம் எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இந்தக் கதையை தான், விஜயிடம் வினோத் சொல்லி ஓகே வாங்கி இருப்பதாக தெரிகிறது.
இதற்காக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் அவர் என்ஓசி பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் விஜய் மற்றும் எச் வினோத் இணைந்து பார்த்தனர். இந்த நிலையில், விஜய்யின் இறுதி திரைப்படத்திற்கான வேலையில் வினோத் தீவிரமாக இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அக்டோபர் மாதம் இதற்கான சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். நேற்று இந்த படத்திற்கான டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரோடுக்ஷன் வேலைகளில், வினோத் தீவிரமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக கோட் படம் வெளியாவதற்குள் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





