இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. தமிழ்நாட்டில் 9 மணிக்கும் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கும் முதல் காட்சி வெளியாக உள்ளது.
இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் படத்தை காண ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் 24 மணி நேரத்தில் 83.7 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு தி கோட் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 39 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்திருந்தது. அதனால் தி கோட் சாதனையை ஜனநாயகன் முறியடித்து இருக்கிறார்.
ஆனால் ஜனநாயகன் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்துக்கொண்டனர். அதாவது 2023ம் ஆண்டில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்பதுதான் அது. மேலும் இந்த படத்தின் உரிமையை ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் 4 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிய தகவலும் உள்ளது.
இதற்கிடையே தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்த மன ஷங்கர வரபிரசாத் காரு என்ற படம் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக வரும் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இதில் இடம்பெற்ற ஒரு பாடல் செம வைரலாகி பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது உறுதியாகிவிட்டது. பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி தான். அவர் இயக்கிய கதை தான் இப்போது ரீமேக் செய்யப்பட்டு ஜனநாயகன் என்ற பெயரில் வரும் 9ம் தேதி தெலுங்கிலும் வெளியாகிறது.
அதனால் மன ஷங்கர வரபிரசாத் காரு என்ற அனில் ரவிபுடி இயக்கிய படத்துக்கு, இப்போது அவரது கதையில் உருவான ஜனநாயகன் படமே போட்டியாக வந்திருக்கிறது. சிரஞ்சீவி நடித்த படத்துக்கு போட்டியாக ஜனநாயகன் படம் தெலங்கானா ஆந்திராவில் அமைந்து விட்டது. தன்னுடைய கதையில் உருவான ஒரு ரீமேக் படமே தனது படத்துக்கு போட்டியாக வருவது இயக்குனர் அனில் ரவிபுடிக்கு விசித்திரமான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.





