நடிகர் விஜய் என்றாலே எல்லா விதங்களிலும் அவருக்கான செல்வாக்கும், வரவேற்பும் வேற லெவலில்தான் இருந்து வருகிறது. துவக்கத்தில் ரஜினி போல, சாதாரண நடிகராக தெரிந்த விஜய், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை காட்டிலும் அடுத்த நிலைக்கு நகர்ந்துக்கொண்டு இருக்கிறார். அரசியல் களத்தில் குதித்து, தமிழக முதல்வர் என்ற லட்சிய பயணத்தை துவங்கியிருக்கிறார்.
விஜய் நடித்த தி கோட் படம் நேற்று வெளியான நிலையில், தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வழக்கமான சினிமா கதை தான் என்றாலும், அதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.
எனினும் தி கோட் வெற்றியை காட்டிலும், மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்கில் பெரிய வெற்றியை பெறுவதில்தான் இப்போதைக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக, அரசியல் இயக்க தலைவராக விஜயின் மொத்த கவனமும் இருக்கிறது. வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடக்க உள்ளது.
இன்னும் ஒரே ஒரு படம் அதுவும் விஜயின் 69வது படம் என்ற நிலையில், எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். அந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு நடிப்புலகை விட்டு அரசியல் உலகில் தனக்கான தலைமை இடத்தை உருவாக்கிக் கொள்ள விஜய் முனைந்திருக்கிறார். இதில் வெற்றியா, தோல்வியா என்பது அவருக்கு ஓட்டுப் போடும் மக்களின் கை விரல்களில்தான் இருக்கிறது.
இதற்கிடையே நடிகர் விஜய், இந்திய அளவில் ஒரு விஷயத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை செய்திருக்கிறார். இந்தியாவில் அதிக வரி செலுத்திய பிரபலங்கள் என்ற பட்டியலில் நடிகர் விஜய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 2024 நிதியாண்டில் நடிகர் விஜய் ரூ. 80 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.
அரசியல், தொழில், விளையாட்டு, சினிமா துறைகள் சார்ந்த பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா நடிகர்கள் வரிசையில் மோகன்லால், விஜய், அல்லு அர்ஜூன் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் 92 கோடி ரூபாய் வரி செலுத்தி முதலிடத்திலும், தமிழ் சினிமா நடிகர் விஜய் ரூ. 80 கோடி வரி செலுத்தி இரண்டாமிடத்திலும் உள்ளனர். சல்மான்கான் 75 கோடி ரூபாய் வரி செலுத்தி 3ம் இடத்திலும், அமிதாப் பச்சன் ரூ. 71 கோடி வரி செலுத்தி 4வது இடத்திலும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.





