தனக்கு பிடித்த, தனது அபிமான நடிகர் நடித்த படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே. அதே போல் எந்த ஒரு நடிகரும், ரசிகர்களுக்கு பிடிக்காத படத்தில் நடிக்கவும் விரும்புவதில்லை. இயக்குநரும் அத்தகைய படத்தை எடுக்க முன்வருவது இல்லை.
ஆனால், நூறு படங்களில் 70 படங்கள் ஏமாற்றம் தரும் படங்களாக தான் ரசிகர்களுக்கு அமைந்து விடுகின்றன. 30 படங்களில், 10 படங்கள் மிகப்பெரிய வெற்றியும், 10 படங்கள் வெற்றியும், 10 படங்கள் சுமாரான வெற்றியும் பெற்று விடுகின்றன. மற்ற 70 படங்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போகின்றன.
சில படங்களை இயக்குவதற்கு முன், இயக்குநர் அந்த படத்தின் கதையை மிக பிரமாதமாக அதில் நடிக்க உள்ள ஹீரோவிடம் கூறுவர். ஆனால், கதை சொன்ன மாதிரியான படம், திரையில் வந்திருக்காது. சிலர், சொதப்பலாக கதை கூறுவது போல தோன்றினாலும், திரையில் அதை சரியாக கொண்டு வந்து விடுவர். இது இயக்குநர்களின் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இதுபற்றி சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவி கூறுகையில், என்னிடம் இயக்குநர் கதை சொல்லும்போது அது பிரமாதமாக இருக்கிறது. ஆனால், படத்தில் அந்த ரிசல்ட் இருப்பதில்லை. கதை சொல்கிற மாதிரியே இயக்குநர்கள் படம் எடுத்தால் வெற்றி பெறும். அப்படி இல்லாததுதான் என் படங்களின் தோல்விக்கு காரணம் என்று மறைமுகமாக கூறியிருந்தார்.
நடிகர் விஜய் நடித்த சில படங்கள் மிக மோசமாக தோல்வியை தழுவி இருக்கின்றன. சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்த படங்களாகவே பார்க்கப்படுகின்றன. விஜயின் சமீபத்திய படங்களான பீஸ்ட், வாரிசு படங்கள் கூட அந்த வகையில் சேர்ந்ததுதான்.
விஜய் அவர் நடிக்கும் படத்தின் பாதி வரை நடக்கும் ஷூட்டிங்கை வைத்தே அந்த படம் வெற்றி படமா, தோல்வி படமா என அறிந்து விடுவார். ஹிட் ஆகும் என தெரிந்துவிட்டால், மிக உற்சாகமாக காட்சிகளில் நடிப்பது, ஷெட்டுக்குள் முதல் ஆளாக வருவது, கலகலப்பாக இருப்பது, டப்பிங் சிறப்பாக பேசுவது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.படத்தின் போக்கு தோல்விதான் என புரிந்துவிட்டால், எவ்வித ஈடுபாடும் இல்லாமல் காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டு, ஏனோதானோவென்று டப்பிங் பேசிவிட்டு சென்று விடுவார் என்கின்றன அவரது நெருங்கிய நட்பு வட்டாரம்.





