நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது இன்னும் 20 ஆண்டுகளாவது அவர் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென கடந்த ஆண்டில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கினார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை துறையினருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
எனினும் விக்கிரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து அப்படியே பலரும் வாயடைத்து போய்விட்டனர். பிறகு மதுரையிலும் அவர் 2வது மாநாடு நடத்தி திமுக பாஜக கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இப்போது திமுக ஆட்சியை அகற்றிவிட்டு தவெக ஆட்சியை பிடிக்கும். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தவெக கட்சிதான் பெரும்பாலான தொகுதிகளில் பெருவாரியான ஓட்டுகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதிமுகவில் இருந்து செங்கோட்டையன், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.
இந்நிலையில் தவெக கட்சி நடவடிக்கைகள் கூட்டங்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விஜய் குறித்த முக்கிய தகவல்கள் என தவெக சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் டிவிகே என்ற யூடியூப் சானல் வழியாக தான் ஒளிபரப்பாகி மக்களை சென்றடைகின்றன. அந்த யூடியூப் சேனலிடம் இருந்து மற்ற டிவி சேனல்கள் வாங்கி அந்த நிகழ்வுகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இப்போது தவெக தலைவர் விஜய் இன்னும் 2 புதிய யூடியூப் சேனல்களை விரைவில் துவங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அரசியல், சினிமா என 2 விதமாக இந்த 2 சேனல்களையும் அவர் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் இவற்றில் ஒன்றை டிவி சேனலாக மாற்ற வாய்ப்புள்ளதாகவும் அதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக தரப்பில் துவங்கிய கலைஞர் டிவி அதிமுக தரப்பில் துவங்கிய ஜெயா டிவி மற்றும் தேமுதிக தரப்பில் துவங்கிய கேப்டன் டிவி போன்றவை மக்களிடம் போதிய செல்வாக்கை பெறவில்லை. இந்த சூழலில் விஜயும் டிவி சேனல் துவங்குவது தேவையற்றது. இதனால் மற்ற செய்தி சேனல்களில் தவெக செய்திகள் தவிர்க்கப்படும் என்று ரசிகர்கள் மற்றும் டிவிகே தொண்டர்கள் கூறுகின்றனர்.





