தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல தமிழகத்தை தாண்டியும் பல்வேறு மாநிலங்களில் விஜய்க்கான ரசிகர்கள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். சமீப காலத்தில் விஜய் படத்தில் இடம்பெறும் சில பாடல்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் ஆர்மாக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் ஜூன் மாதத்தில் பிரபலமான நடிகர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் நடிகர் விஜய். அவரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகரான ஷாருக்கான் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பாகுபலி மூலம் உலக ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபாஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் அவரைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆரும் உள்ளனர். இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளார் நடிகர் அஜித்குமார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இந்த வரிசையில் பத்தாவது இடம் பிடித்துள்ளார்.
நடிகைகளை பொறுத்த வரை சமந்தா முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆலியாபட்டும் அவருக்கு அடுத்தபடியாக தீபிகா படுகோனேவும் உள்ளனர். நயன்தாரா இந்த வரிசையில் நான்காவது இடத்திலும் காஜல் அகர்வால் ஐந்தாவது இடத்திலும் திரிஷா ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல் கீர்த்தி சுரேஷ் ஒன்பதாவது இடத்தையும், ராஷ்மிகா மந்தனா பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இது ஜூன் மாதத்திற்கான வெளியீடு தான். நடிகர்களுக்கான பட்டியலில் நடிகர் விஜய் இதுபோல் முன்னிலையில் உள்ளதால் அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கபட்டது போல அக்டோபர் 19ஆம் தேதி அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் . அதே சமயம் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் செய்து வருகிறார். இதன் மூலம் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது





