தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்த முடிந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. வரும் மே 4ம் தேதி திங்களன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக அரசியல் களமும் ஓட்டுப் போட்ட மக்களும் பரபரப்புடன் அந்த நாளுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வெளியான தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று சில செய்தி நிறுவனங்களும், மீண்டும் திமுகவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் சில செய்தி நிறுவனங்களும் கூறியிருக்கின்றன. இந்தியா டுடே மட்டும் தவெக 120 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழலில் இன்று மதியம் சென்னையை அடுத்துள்ள பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் தவெக கட்சி வேட்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 233 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது, வாக்கு எண்ணும் மையங்களில் மிகவும் கவனமாக இருந்து ஓட்டு எண்ணிக்கையை கவனிக்க வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவு அறிவித்தவுடன் உடனடியாக வேட்பாளர்கள் அனைவரும் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும்.
இரவு எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும் கட்சியின் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு நேராக வந்துவிட வேண்டும். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டுள்ளார்கள். அதனால் மக்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும். உங்களிடம் சிலர் குதிரை பேரம் பேசுவார்கள். உங்களை விலை பேசுவார்கள். தங்கள் கட்சிக்கு வருமாறு அழைப்பார்கள். ஏமாந்து விடாதீர்கள்.
தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்காக நான் பனையூர் அலுவலகத்தில் காத்திருப்பேன். உங்களது வருகையை எதிர்பார்த்து இருப்பேன். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் இங்கு வந்துவிட வேண்டும் என்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும் வேட்பாளர்களுக்கு பல அறிவுரைகளையும் அவர் தந்திருக்கிறார்.





