நடிகர் விஜயகாந்த் நேற்று காலை 6 மணியளவில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து, விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. ஏறக்குறைய 3 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் அந்த வாகனம் மதியம் ஒரு மணியளவில் கட்சி அலுவலகம் வந்து சேர்ந்தது.
அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு சினிமா நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் விஜயகாந்த் உடல், கட்சி அலுவலகத்திலேயே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு நடிகர் விஜய், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு நேரில் வந்தார். மீசை, தாடியில்லாமல் இளமையான தோற்றத்தில் காணப்பட்ட விஜய், கண்ணாடிப் பேழைக்குள் இருந்த விஜயகாந்த் உடலை பார்த்து கண் கலங்கினார். கனத்த இதயத்துடன் சில நிமிடங்கள் விஜயகாந்த் உடலை பார்த்தபடி நின்றார்.
அதன்பின், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் அருகில் இருந்த பிரமேலதா விஜயகாந்திடம் அழுதபடி ஆறுதல் தெரிவித்த விஜய், அங்கிருந்த மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கும் ஆறுதல் சொன்னார். பின்னர் அந்த இடத்தில் நெருக்கடி அதிகரித்த நிலையில், அங்கிருந்து விஜய் சென்றார்.
விஜய் நடிக்க வந்த புதிதில், அவரது வளர்ச்சிக்கு உதவும் வகையில் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த், தனது தம்பியாக விஜயை நடிக்க வைத்தார். அதன்பிறகுதான் விஜய்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் வளர்ந்து பெரிய நடிகரான பின், விஜயகாந்தை விஜய் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. குறிப்பாக அவர் உடல் நலமின்றி இருந்த போது, விஜய் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்த நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்.





