நடிகர் சூர்யாவுக்கு கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது. பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்று பலரும் கூறினார்கள். ஆனால் சூர்யாவின் திரைப்படத்திற்கு மட்டுமே திட்டமிட்டு இப்படி விமர்சனங்கள் பரப்பப்படுவதாக ஜோதிகா குற்றம் சாட்டினார்.
இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் நடிகர் சூர்யா. தற்போது அவர் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக வருகிறார். கருணாகரன் ஜெயராம் நாசர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
வரும் மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான கனிமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. பூஜாவின் நடன அசைவுகள் பலரையும் கவர, அதேபோல் டான்ஸ் ஆடி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இதன் படப்பிடிப்பு நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் கோவை சுற்றுவட்டார பகுதியில் காட்சிகளை படமாக்கினார்கள். இது ஃபேண்டஸி கலந்த திரைக்கதையாக எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வருகிறார் சூர்யா. திரிஷா சுவாசிகா உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா யாருடன் இணைய போகிறார் என்ற கேள்வி தான் தற்போது எழுந்து வருகிறது. தனுசை வைத்து சார் மற்றும் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரியுடன்தான் சூர்யா இணையப் போவதாக தகவல்கள் தெரிவித்தன. அதேசமயம் வெற்றிமாறன் உடனான வாடிவாசல் திரைப்படம் என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் இது குறித்த பதிலை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மட்டும் தான் அவ்வபோது அளித்து வருகிறார். அண்மையில் கூட பேட்டி ஒன்றில் கூறியிருந்த அவர், வாடிவாசல் படத்தின் சூர்யாவின் அறிமுகக் காட்சி மிக நன்றாக இருக்கும் என்றும் இதற்காகவே நூறு முறை இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிறார் தாணு. இதற்கான படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.





