தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 1980, 90களில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் பல வெற்றி படங்களைத் தந்தவர். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சின்னக் கவுண்டர், ஊமை விழிகள், ரமணா போன்ற பல படங்கள் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், பிறகு கேப்டன் என அழைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கிய அவர் தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அவரது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய ஓட்டு எண்ணிக்கையை பெற்றவர். தொடர்ந்து இரண்டாவது சட்டசபை தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி, அதிமுகவுக்கு எதிர்க்கட்சியாக சட்டசபையில் விஜயகாந்த் அமர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலிலும் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விஜயகாந்த் கடந்த ஆண்டில் டிசம்பர் மாத இறுதியில் உடல் நலக்குறைவால் காலமானார்.
விஜயகாந்த் ஆரம்பத்தில் நடிகர் விஜய் அப்பா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் நடித்தவர். நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி அவரை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் செந்தூரப்பாண்டி என்ற படத்தில் விஜய்க்கு அண்ணனாக கேப்டன் நடித்திருந்தார்.
நடிகர் விஜயகாந்த் மறைந்த பிறகு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விஜய் நடித்த தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வரும் இடம்பெற்றன. இதுகுறித்து இன்று கோவையில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கூறுகையில், தி கோட் படம் நன்றாக இருந்தது. அப்பா நடித்த காட்சிகளை பார்த்த போது மிகவும் உணர்வுபூர்வமாக எனக்கு இருந்தது.
விஜய் அண்ணன் முதலில் அவர்களது கட்சிமாநாட்டை நடத்தி முடிக்கட்டும். அவர்களுடைய சேவைகள், கொள்கைகள் குறித்து பேசி மக்கள் மத்தியில் அதற்கு என்ன செல்வாக்கு கிடைக்கிறது என்று முதலில் பார்க்க வேண்டும். அதன்பிறகு தான் அவரது கட்சியுடன் கூட்டணி சேர்வதா என்று அடுத்த கட்டத்திற்கு நாங்கள் செல்ல முடியும். அவருடைய கொள்கை அவருடைய தனித்துவம் என்ன என்பதை முதலில் அவர் நிரூபிக்கட்டும். அதற்குப் பிறகு தான் கூட்டணி சேர்வது குறித்து பேச முடியும். சமீபத்தில் கட்சியை ஆரம்பித்தது அவர்தான். தேமுதிகவுடன் கூட்டணி குறித்து விஜயிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார்.





