நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கும் அவர் அடுத்ததாக, அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. சமீபத்தில்தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார் விஜய்.
அந்த கூட்டத்தில் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எதுவும் எழுதாத வெள்ளை காகிதத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இது, விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற பெறப்பட்ட கையெழுத்தா அல்லது தொகுதி வாரியாக அவர்களை கட்சி நிர்வாகிகளாக நியமிக்க பெறப்பட்ட கையெழுத்தா என்பது உறுதியாகவில்லை.
இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதத்தில், மதுரையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்தவும், அதில் தனது அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக முன்னேற்ற கழகம் ( தமுக) என்பது கட்சியின் பெயராக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.
இப்போது கட்சி துவங்கவும், அரசியல் மாநாட்டை பிரமாண்டமாகவும் நடத்தவும் இன்னும் அடுத்தடுத்த அரசியல் பணிகளை செய்யவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும் முதல்கட்டமாக விஜய்க்கு ரூ. 1500 கோடி முதல் ரூ. 2000 கோடி வரை பெருந்தொகை தேவையாக இருக்கிறது. அவரது கையிருப்பு சில நூறு கோடிகளாக இருந்தாலும் பெரும்தொகை என்பதால் அதை திரட்ட விஜய் ஒரு புது யோசனை செய்திருக்கிறார்.
ஏனெனில் கட்சி நிர்வாகிகளாக உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் எல்லாம் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் கிடையாது. இதுவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடாக இருந்தால், கட்சி நிர்வாகிகளாக உள்ள அமைச்சர்கள், எம்பிகள், எம்எல்ஏக்கள் இந்த கோடிக்கணக்கான ரூபாய் செலவுகளை மிக சுலபமாக செய்து விடுவர். ஆனால் விஜயை பொருத்த வரை, அவர் தரப்பில் இருந்து மட்டுமே அரசியல் கட்சி செலவுகளை ஈடுகட்ட முடியும்.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த மிகப்பெரிய தெலுங்கு படங்கள் தயாரிப்பு நிறுவனமான டிவிவி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விஜயின் அடுத்த படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் டிடிவி தனய்யாவுடன் விஜய்பேச்சுவார்த்தை நடத்தி, சில படங்களில் தொடர்ந்து நடிக்க கால்ஷீட் தந்து, ஒரு பெரும்தொகையை விஜய் கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது உருட்டா, உண்மையா என்பது போக போகத்தான் தெரியும்.





