விஜய் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறி வருகிறார். அதற்கான முன்னெடுப்பு பணிகளிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். அவ்வபோது தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளை சந்தித்து வரும் அவர், தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க தனது கடைசி திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார். ஜனநாயகன் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ஹெச் வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் அரசியல் களத்தில் இறங்கி இருப்பதால் இதன் படப்பிடிப்பை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடத்தவில்லை.
முழுக்க முழுக்க சென்னையை சுற்றியே படமாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பையனூர் படப்பிடிப்பு தளத்தில் இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார். மே மாதம் விஜய்க்கான போர்ஷன் முடியும் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. இதன் நடுவே விஜய்யின் திரைப்படங்களை, ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் இப்படித்தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
பலரும் திரையரங்குகளுக்கு சென்று ஆவலோடு கில்லி திரைப்படத்தை மீண்டும் பார்த்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையரங்குகளில் மீண்டும் பெரும் வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த சச்சின் திரைப்படமும் ரீரிலிஸ் செய்யப்பட்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்றது.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த திரைப்படத்தை ஜான் என்பவர் இயக்கி இருந்தார். சச்சின் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணு தற்போது மீண்டும் அதனை ரீ ரிலீஸ் செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அது வரவேற்பு பெற்றுள்ள சூழலில், அது முதல் நாளில் ஒரு கோடியே 90 லட்சம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களிலும் சச்சின் திரைப்படம் கூடுதல் வசூல் ஈட்டும் என தெரிகிறது.





