விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்கிய இந்த 9வது சீசன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வருகிற 18ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அரோரா திவ்யா கணேஷ் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சபரிநாதன் ஆகிய 4 பேர் மட்டுமே இறுதி போட்டியாளர்களாக உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இந்த 9வது சீசனின் டைட்டில் வின்னர் கம்ருதீன் அல்லது பார்வதிக்கு கிடைக்கும் என்ற பேச்சு பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அடிபட்டது. பார்வதி தாறுமாறாக வீட்டுக்குள் நடந்துக் கொண்டாலும் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போக முக்கிய காரணமாகவே இருந்தவர் அவர்தான் என்று பலரும் கூறிய நிலையில் டைட்டில் வின்னர் ஆகும் தகுதிக்குரிய ஒருவராக பார்க்கப்பட்டார்.
அடுத்ததாக கம்ருதீனுக்கு டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்பும் மிக நன்றாகவே இருந்தது. போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் ஒரு கட்டத்தில் பார்வதி பேச்சை கேட்டுக்கொண்டு கம்ருதீன் நடந்துக்கொண்ட விதமும் பேசிய வரம்பு மீறிய வார்த்தைகளும் குறிப்பாக கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை காரை விட்டு வெளியே தள்ளி விட்ட சம்பவமும் அவர்கள் இருவரையும் ரெட்கார்டு காட்டி வெளியேற்றும் நிலைக்கு கொண்டு போய் விட்டது.
அதன்பிறகு கானா வினோத் தான் டைட்டில் வின்னர் என்பது 90 சதவீதம் உறுதியான நிலையில் அவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டி டாஸ்க் நடந்த போது திடீரென 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார். அதற்கு முன்பு அரோரா கானா வினோத்திடம் பேசிய போது, இந்த வாரம் பணப்பெட்டியுடன் வெளியேறுபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். நல்ல சான்ஸ் என்று தூண்டிவிட்டார். இது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த ரசிகர்களுக்கே தெளிவாக தெரிந்தது.
இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த வியானா பிரவீன் ராஜ் இருவரும் அரோராவின் தூண்டுதலால் தான் கானா வினோத் யோசிக்காமல் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பை தவற விட்டுவிட்டு அவசர முடிவில் பணப் பெட்டியுடன் வெளியேறினார். அவர் அப்படி செய்த போது அரோரா சந்தோஷமாக சிரித்தார். விக்ரமும் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று பகிரங்கமாக பேசினார்கள்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, குறும்படம் போட்டுக் காட்டி வியானா பிரவீன் ராஜ் கருத்துகளை மறுத்தார். கானா வினோத் அவரது விருப்பபடிதான் பணப்பெட்டியுடன் வெளியே சென்றார் என்று பேசினார். இதை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்ட சில பிக்பாஸ் ரசிகர்கள், உண்மையில் அரோரா தூண்டுதலின்தான் கானா வினோத் வெளியே போனார். எதற்காக இப்படி விஜய் சேதுபதி தேவையின்றி அரோரா விக்ரமுக்கு ஆதரவாக குறும்படம் காட்ட வேண்டும்? இது அவசியமே இல்லை. ஒருவேளை அந்த உண்மை ரசிகர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதுதான் இதன் உள்நோக்கமா என கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.





