விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு வரை 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுப்பாளராக சிறப்பாக நடத்தி வந்த நிலையில், இந்த முறை அவர் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
நிறைய படங்களில் நடிக்க வேண்டி இருப்பதாகவும், அரசியல் பணிகள் காரணமாகவும் தன்னால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்களிப்பு செய்ய இயலாது என்று ஏற்கனவே கமல் அறிவித்துவிட்டார். இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம், நடிகர் விஜய் சேதுபதியை இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிவித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் மீதான மிகப்பெரிய ஒரு அபிமானத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்திய நிலையில், அந்த அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி கொண்டு செல்வாரா என்பதில் பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகமும் குழப்பமும் இருந்தது. ஏனெனில் கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் முன்னணி நடிகராக பயணித்தவர். நிறைய புத்தகங்களை படிப்பவர். கதை திரைக்கதை டைரக்சன் கவிஞர் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
அதனால் கமல் அளவுக்கு விஜய் சேதுபதியால் இந்த நிகழ்ச்சியை திறம்பட கொண்டு செல்ல முடியுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கெல்லாம் பதிலடி தரும் விதமாக விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 வாரங்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் போல் மேம்போக்காகவும், சுய தம்பட்டமாகவும் தற்பெருமையாகவும் பேசாமல் போட்டியாளர்களை நேரடியாக வார்த்தைகளால் போட்டுத் தாக்குகிறார்.
பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்விகளை எழுப்பி அவர்கள் தரும் பதில்களை கலாய்ப்பதும், நேரடியாக அவர்களை வார்த்தைகளால் எதிர்மறை தாக்குதல் நடத்துவதும் விஜய் சேதுபதிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்று தந்து வருகிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று பஞ்ச் டயலாக் கூறியதை போலவே, இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை நேரடியாக தாக்கி பேசி அவர்களுக்காக குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார் விஜய் சேதுபதி.
அதே நேரத்தில் பாராட்டுக்குரிய செயல்களை போட்டியாளர்கள் செய்யும் பட்சத்தில் அதையும் வெளிப்படையாக கைதட்டி பாராட்டுகிறார். சினிமாவில் நடிப்பது போல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்காமல் போட்டியாளர்களிடம் அவர் இயல்பாகவும் எதார்த்தமாகவும் நடந்து கொள்வதும், தவறுகளை சுட்டிக் காட்டுவதும் நிறைகளை பாராட்டுவதும் என விஜய் சேதுபதியின் இந்த செயல்பாடு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை, ஆதரவை பெற்று தந்திருக்கிறது.





