தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில காட்சிகளில் நடித்து, பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதையின் நாயகனாக நடித்து, இப்போது மக்கள் செல்வன் என்ற அடைமொழியுடன் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவரது 50வது படம் மகாராஜா பெரிய அளவில் பிரமாண்ட வரவேற்பும் வெற்றியும் பெற்றிருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. அதே போல் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல் செய்த பணியை, இனி விஜய் சேதுபதி 8வது சீசன் முதல் தொடர இருக்கிறார். கமலும், விஜய் சேதுபதியும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படமும் மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் நடக்க உள்ள நிலையில் இதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக ரூ. 150 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார். ஏனெனில் இந்த நிகழ்ச்சி பல விதங்களில் வசூலை, வருமானத்தை வாரிக் குவிக்கிறது.
ஆனால் தனது சம்பளத்தை ரூ. 100 கோடி வரை உயர்த்தாமல் கமல் வாங்கிய சம்பளத்தில் 3ல் ஒரு மடங்கு என்பது விஜய் சேதுபதியின் கவனக்குறைவுதான் காரணம் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். மகாராஜா படம் மாபெரும் வெற்றி பெற்ற போது தனது சம்பளத்தை ரூ. 15 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக குறைத்தார். இப்போது ரூ. 100 கோடி சம்பளத்தை ரூ. 50 கோடியாக வாங்குகிறார். பேட்ட படத்தில் ரஜினி சொன்ன டயலாக் போல, நீங்க நல்லவரா இருங்க, அதுக்காக ரொம்ப நல்லவரா இருக்காதீங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





