நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் 69 படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்ற பெரும் குழப்பமே இதுவரை நீடிக்கிறது. ஏனெனில், கோட் படம் 75 சதவீதம் கடந்துள்ள நிலையில், விஜயின் அடுத்த படம் குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.
விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே அரசியல் கட்சியாக பெயர் மாற்றம் செய்து, தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை புஸ்லி ஆனந்த் மூலமாக மிக தீவிரமாக அவர் மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதில் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக இருக்கப் போவது யார் என்பதில் இதுவரை குழப்பமே நீடிக்கிறது. ஏனெனில் அரசியல் அனுபவம் வாய்ந்தவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர். ஆனால், ஆண்டுக்கணக்கில் அவரிடம் விஜய் பேசாமல் இருக்கிறார். தமிழக அரசியலை எதிர்த்து விஜய் களத்துக்கு வருவதால், மற்றவரிடம் ஆலோசிக்கவும் வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் டெல்லியில் உள்ள சில தேசியக்கட்சிகளிடம் விஜய் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன் அடிக்கடி தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசித்து வரும் விஜய், தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பாணியில் மக்கள் செல்வாக்கு என்றுமே சரியாத ஒரு அரசியல்வாதியாக இருக்கவே திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளை அழைத்து விஜய், ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார். இதில் தனது அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை என்னவென்றும் தொகுதி வாரியாக விசாரித்திருக்கிறார்.
இதற்கிடையே கூட்டத்தில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. இது தங்களது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றவா, அல்லது தேர்தலில் அவர்களை நிறுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஜெயலலிதா வேட்பாளர்களிடம் இப்படி வெற்று காகிதத்தில் முன்பே கையெழுத்து வாங்கி வைத்துக்கொள்வார். பணியில் அவர்கள் மீது களங்கம் வந்தால் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கி விடுவார். அந்த ஸ்டைலில் ஜெயலலிதா பாணியில் விஜய் கையெழுத்து பெற்றாரா, இது விதிமீறல் என்ற சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது.





