நடிகர் விஜய், அரசியலில் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு கணித்து பல கோணங்களிலும் ஆராய்ந்து தெளிவாக காய்களை நகர்த்தி வருகிறார். ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல், தெளிவான பாதையை உருவாக்கி அதில் வெற்றி நடை போட்டு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, முதல்வர் இருக்கையை பிடித்து விடும் இலட்சியத்தில் அவர் இருந்து வருகிறார்.
செப்டம்பர் மாதம் 5ம் தேதி, தி கோட் படம் ரிலீஸ் ஆன பிறகு படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அந்த மாதத்திலேயே குறிப்பாக செப்டம்பர் மாதம் 21ம் தேதி, தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாட்டை, திருச்சியில் உள்ள சிறுகனூர் என்ற பகுதியில் இந்த மாநாட்டை நடத்த அவர் முடிவு செய்திருக்கிறார்.
அந்த பகுதியில், மிக பிரமாண்டமான மாநாட்டு பந்தலில் 10 லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை கவனிக்கும் விதமாக 10 லட்சம் இருக்கை வசதிகளுடன், வரும் தொண்டர்கள், கட்சியினர் அனைவருக்கும் கமகம பிரியாணி விருந்து படைக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தவும், வந்து செல்லும் மக்களுக்காக பார்க்கிங் வசதி, போக்குவரத்து வசதிகளையும் இப்போதே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில்தான் கட்சியின் கொடி, சின்னம், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் அறிவிப்பு, கட்சியின் எதிர்கால திட்டங்கள், அரசியல் வாழ்க்கையில் விஜய் கொண்டு வர உள்ள புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த இந்த மாநாட்டில் விஜய், தனது உரையில் அனைத்து விஷயங்களையும் பேச இருக்கிறார்.
மேலும் இந்த மாநில மாநாட்டுக்கு பிறகு, தமிழகத்தில் நான்கு இடங்களில் மண்டல மாநாடுகள், பிறகு மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி அந்த கூட்டங்களிலும் விஜய் பங்கேற்று பேசுகிறார். மக்களை நேரடியாக சந்திக்கிறார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதிகளில் நேரடியாக நடைபயணம் செய்து, மக்களை நேரடியாக சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
திருச்சியில் நடக்கும் மாநில மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு உணவு தயார் செய்ய சமையல் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதர விஷயங்களை ஏற்பாடு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் கட்சியினர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகைகளை வழங்கியது போல, இந்த அரசியல் மாநாட்டிலும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கவும் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மொத்தத்தில் தமிழக அரசியல் கட்சிகளை கதிகலங்க வைக்கும் விதமாக இந்த மாநாட்டை நடத்திக்காட்ட வேண்டும் என, தனது கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.





