கிராமங்களில் இப்போதும் ஒரு பழமொழி சொல்வார்கள். 5 வயது வரை தான் தான் அண்ணன் தம்பி, 10 வயதாகி விட்டால் பங்காளிகள் என்பார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு சகோதரர்கள் கூட விரோதிகளாக மாறி விடுவார்கள் என்பதை குறிப்பிடும் விதமாக இப்படி ஒரு பழமொழி இருந்து வருகிறது.
இது அரசியலில் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு பழமொழி என்றால் அது மிகையல்ல. நடிகர் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது, தம்பி விஜய் அரசியலுக்கு வருகிறார் வரட்டும் நல்லது செய்யும் எண்ணத்துடன் யார் வந்தாலும் அதை வரவேற்போம். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை என்று யதார்த்தமாக பேசியவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆனால் விஜய் நடத்திய தவெக அரசியல் மாநாட்டுக்கு பிறகு, சீமான் அப்படியே மொத்தமாக மாறிவிட்டார். திமுகதான் எங்களுடைய அரசியல் எதிரி என்று அரசியல் மாநாட்டில் தலைவர் விஜய் பிரகடனப்படுத்திய நிலையில், திமுகவை காட்டிலும் அதிகமாக கொந்தளித்து போயிருப்பது நாம் தமிழர் கட்சி சீமான்தான்.
அரசியல் மாநாட்டில் திமுக தான் எங்களது பிரதான எதிரி என்று விஜய் கூறிய பிறகு, அதுகுறித்து திமுக தரப்பில் எந்த விதமான எதிர் விமர்சனங்களோ, விஜய் குறித்த தரக்குறைவான கருத்துகளையோ அந்த கட்சி சார்ந்த யாருமே இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி கூட்டங்களில் சீமான், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நீ பேசறது எல்லாம் பஞ்ச் டயலாக், நான் பேசறது எல்லாம் நெஞ்சு டயலாக். ரோட்ல இந்த பக்கமா நிக்கணும், இல்லைன்னா அந்தப் பக்கமா நிக்கணும், நடுவுல நின்னா லாரி அடித்து விடும், நீ வரலாறுகளை பேச வந்தவன். நான் வரலாறு கற்பிக்க வந்தவன் என்றெல்லாம் தாறுமாறாக விஜயை விமர்சித்து சீமான் பேசி வருகிறார். சீமானின் இந்த பேச்சுக்கு விஜய் கட்சியினர் எந்தவித பதிலையும் தராமல் அமைதியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சீமான் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தன்னை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேசி வரும் நிலையிலும், அரசியல் நாகரித்துடன், சக அரசியல் தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் சீமானுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நாகரிகம் என்றால் இதுதான் என்று பலரும் விஜயை பாராட்டி வருகின்றனர்.





