நடிகர் விஜய், 1990களில் நடிக்க ஆரம்பித்து, தமிழ் சினிமாவிற்கு வந்து 35 ஆண்டுகளாகிறது. அதற்கு முன் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் சில படங்களில் விஜய் நடித்திருக்கிறார். இதுவரை விஜய் நடித்துள்ள படங்கள், தற்போது நடித்து வரும் கோட் படம் உள்பட 68. இதன்பிறகு ஒரு படத்தில், அதாவது தனது 69வது படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்பகால கட்டத்தில் அவருக்கு காதல் படங்கள்தான் கை கொடுத்தன. அவரது வளர்ச்சிக்கு காதல் படங்கள் வெகுவாக துணை நின்றன. குறிப்பாக துள்ளாத மனமும் துள்ளும், லவ்டுடே, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, குஷி, ஷாஜகான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படங்களில் அவரது காதல் சார்ந்த நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.
குறிப்பாக துள்ளாத மனமும் துள்ளும், லவ்டுடே, காதலுக்கு மரியாதை, குஷி, பூவே உனக்காக படங்கள், 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி விழா படங்களாக விஜய்க்கு அமைந்தன. அதே போல் இந்த படங்களில் நடித்த நாயகிகள் சிம்ரன், சுவலட்சுமி, ஷாலினி, ஜோதிகா, சங்கீதா போன்றவர்களுக்கும் இது பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குநர் விக்ரமன். புதுவசந்தம், பிரியமான தோழி, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர். ஒவ்வொரு படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய மெகாஹிட் படங்களாக பேசப்பட்டன.
விஜயை ஹீரோவாக வைத்து பூவே உனக்காக என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் விக்ரமன், அடுத்து விஜயை ஹீரோவாக வைத்து, உன்னை நினைத்து படம் இயக்கினார். சில காட்சிகளில் நடித்த விஜய், இந்த படத்தின் கிளைமேக்ஸ் எனக்கு சரியாக படவில்லை. எனக்கு செட் ஆகுமா என தெரியவில்லை. மாற்றினால் நன்றாக இருக்கும் என்று விக்ரமனிடம் கூறியிருக்கிறார்.
அப்போது தனியறைக்கு அழைத்துச் சென்ற டைரக்டர் விக்ரமன், இது என்னுடைய கதை. நான் தீர்மானித்த கிளைமேக்ஸ். உங்களுக்காக என் கதையையோ, என்னையோ மாற்றிக்கொள்ள முடியாது. ஒவ்வொ சீன் எடுக்கும்போதும் விஜய்க்கு இது பிடிக்குமா, பிடிக்காதா என நினைத்துக்கொண்டு, உங்களை கேட்டுக்கொண்டு எடுக்க முடியாது. என் சுயத்தை நான் இழக்க மாட்டேன். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நாம் நண்பர்களாக இருப்போம், என்று கூறியதாக, இயக்குநர் விக்ரமன் சமீபத்தில் பேசிய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.





