தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். துவக்கத்தில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்த ரஜினி, கலைஞானம் தயாரிப்பில் பைரவி படம் மூலம் ஹீரோவானார். அதன்பின் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படம், ரஜினிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. பிறகு 16 வயதினிலே, பொல்லாதவன், முரட்டுக்காளை என பல படங்கள் அவருக்கு பெரிய புகழை பெற்றுத் தந்தன.
அதே போல், நடன இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்த கமல்ஹாசன், தங்கப்பன் மாஸ்டரிடம் பணிசெய்தார். பிறகு நாளடைவில் கே பாலசந்தர் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். ரஜினி நடிக்க வரும்போதே, தமிழில் ஒரு முன்னணி நடிகராக கமல்ஹாசன் இருந்தார். எனினும் ரஜினியுடன் எந்த ஈகோவும் இல்லாமல் நட்பு பாராட்டி இருக்கிறார் கமல். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கமலை அழைத்துச் செல்ல வரும் கம்பெனி காரில், துணை நடிகராக இருந்த ரஜினியையும் அழைத்துச் செல்வது கமலின் சிறந்த நட்புக்கான உதாரணம்.
இப்படி ரஜினி, கமல் இருவரும் ஒரு சகோதர பாசத்தை தாண்டிய நட்புடன் பழகிய நிலையில், அவர்கள் சேர்ந்து நடித்த பல படங்கள் பெரிய ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. இதனால் தயாரிப்பாளர்கள் கணிசமான லாபம் அடைந்தனர். ஆனால் ரஜினி, கமல் வழக்கமான சம்பளத்தை மட்டுமே பெற்றனர். இந்த நிலை குறித்து இருவரும் கலந்து பேசிய நிலையில், தனித்தனியாக நடித்தால் தான் நமது திறமைக்கான, உழைப்புக்கான ஊதியம் கிடைக்கும் எனவும் தீர்மானித்தனர்.
இவர்கள் பிஸியாக நடித்த காலகட்டத்தில்தான் சங்கிலி படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்தார் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் என்ற அடையாளத்துடன் வந்த பிரபுவுக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்ததால், அவரும் ஒரு வெற்றிப்பெற்ற நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இதே காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்தும் நடிக்க வந்து ஒரு முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என தமிழ் பட ஹீரோக்கள் வரிசையில் பல படங்களில் இவர்கள் நடித்தனர். இதில் ரஜினியுடன் பிரபு, கமலுடன் பிரபு இணைந்தும் சில படங்களில் நடித்தார். ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியான ஒரு இடத்தில் விஜயகாந்த் மிக முக்கிய நடிகராக இருந்தார். வைதேகி காத்திருந்தார், அம்மன் கோவில் கிழக்காலே, புலன்விசாரணை, செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன் என பல படங்கள் விஜயகாந்துக்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தன.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரா படம் தோல்வியடைந்தது. கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, அவரது 100வது படம் வெற்றி பெறவில்லை. நடிகர் பிரபு நடித்த 100வது படம் ராஜகுமாரன், மிக மோசமாக தோல்வியடைந்தது. ஆனால், இதில் 100வது படத்தில் நடித்த விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படம் மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடி, அவரது சினிமா பயணத்திலேயே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இதில் இருந்துதான் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார். இந்த விஷயத்தில் ரஜினி, கமல், பிரபு ஆகியோரை ஓவர்டேக் எடுத்து ஜெயித்தவர் கேப்டன் விஜயகாந்த்.





