விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பா ரஞ்சித் இதனை இயக்கி இருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைவாக இருந்ததாகவும், அது ரசிகர்களை கவரவில்லை என்றும் அப்போது பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து சித்தா படத்தை எடுத்த அருண்குமாருடன் கைகோர்த்தார் விக்ரம். வீர தீர சூரன் என இதற்கு தலைப்பிடப்பட்டு நேரடியாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது. கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஒரே ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இதனை வடிவமைத்திருந்தார் அருண்குமார்.
படத்தில் காளி என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். சுராஜ் மற்றும் அவரது தந்தையின் ரவுடி கூட்டத்தில் விக்ரம் இருக்க, ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியே வந்து தனக்கான குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். மளிகை கடை நடத்தி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் சுராஜிற்கு காவல்துறையினரால் ஆபத்து ஏற்பட, அவரது தந்தை, விக்ரமிடம் சென்று உதவி கேட்க இதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைத்தான் இதில் காட்டியிருந்தார்கள்.
படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருந்த இயக்குனர் அருண்குமார், இரண்டாம் பாதியில் அதை அப்படியே மெயின்டைன் செய்து பாராட்டைப் பெற்றார். தனது காளி எனும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி, சிறப்பான நடிப்பை விக்ரம் வெளிப்படுத்தி இருந்தார். எஸ்.ஜே சூர்யாவும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சரியாக பொருந்தி நடித்திருந்தார். 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டியதாக அப்போது சொல்லப்பட்டது.
இந்த நிலையில் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து மண்டேலா என்னும் திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை வென்றார். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்தும் அவர் மாவீரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனால் இந்த கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால், படத்தின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணம் எதுவும் இன்னும் சொல்லப்படவில்லை. இதன் நடுவே தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையில் ஆர்வம் காட்டி வருகிறார் விக்ரம். ஏற்கனவே அவர் 96 பட இயக்குனர் பிரேம்குமாரின் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.





