தமிழ் சினிமா கலைத்துறை சார்ந்த பிரபலங்களிஜ் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவில் வந்துக்கொண்டே இருக்கின்றன. சிவாஜி மகன் பிரபு, பிரபு மகன் விக்ரம் பிரபு, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ் மகன் சிபி, கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், சிவக்குமார் மகன்கள் கார்த்தி, சூர்யா என வரிசை நீண்டுகொண்டே போகும்.
கலைத்துறை சார்ந்த நடிகர், நடிகையர் பெரும்பாலும் தங்களது வாரிசுகளை பேரும், புகழும் சம்பாதித்துக்கொடுக்கும் சினிமா துறையில் தான் இறக்கி விடுகின்றனர். இதில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரது வாரிசுகள் சினிமாத்துறைக்கு வந்துவிடுகின்றனர்.
ஆனால் சினிமா சார்ந்தவர்கள் பலரது வாரிசுகள், வெவ்வேறு துறைகளிலும் சாதிக்கின்றனர். குறிப்பாக நடிகர் சின்னி ஜெயந்த் மகன், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று திருப்பூரில் சப் கலெக்டராக பணிசெய்தார். நடிகர் தனுஷின் அக்கா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பெரிய டாக்டராக இருக்கிறார். காமெடி நடிகர் செந்தில் மகனும் டாக்டர்தான்.
சினிமாவில் பேர், புகழ் கிடைத்தாலும் கலைக்கூத்தாடி என்பதுதான் நடிகர், நடிகைகளுக்கான பொது அடையாளமாக சமுதாயத்தில் இருக்கிறது. சினிமாவை பார்த்து ரசிப்பவர்களுக்குதான் சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி எல்லாம். சினிமா பார்க்காதவர்களுக்கு விரும்பாதவர்களுக்கு நடிகர், நடிகையர் மிக சாதாரணமான ஆட்கள்தான்.
அதனால் தங்களது பிள்ளைகள் அவர்கள் விரும்பிய துறையில் வளர வேண்டும் என்று அவர்கள் போக்கிலேயே விட்டுவிடும் பெற்றோரும் இருக்கின்றனர். அவர்களது திறமையை ஊக்குவித்து, அவர்கள் அதில் அதிக வளர்ச்சி பெறவும் ஆதரவாக செயல்படுகின்றனர். அந்த வகையில், நடிகர் விக்ராந்த் இப்போது தனது மகன் யஷ்வந்த் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ராந்த், நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசி இருக்கிறார். அவரது 2 பிள்ளைகளில் ஒருவரான யஷ்வந்த், தனது அப்பாவை போலவே கிரிக்கெட்டில் புலியாக இருக்கிறார். பல கிரிக்கெட் போட்டிகளில் அவர் சிறந்த முறையில் விளையாடிய நிலையில், 14 வயதுக்குட்பட்டோர் தமிழக கிரிக்கெட் அணியில் யஷ்வந்த் இடம்பெற்றுள்ளார். இதை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு விக்ராந்த் எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள், சினிமா துறை சார்ந்தவர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.





