இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முதல் ஆளாக இருக்கும் பா ரஞ்சித்திற்கு முதல் திரைப்படம் அட்டகத்தி தான். வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த அவர், தனது முதல் திரைப்படத்திலேயே பட்டியலின இளைஞரின் வாழ்க்கை பின்னணியையும், அவரது காதல் பருவத்தையும் மிக ஜாலியாக கூறியிருந்தார்.
சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பட்டியலின மக்களின் பின்னணியையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வெற்றிகரமாக அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தவர் பா ரஞ்சித். இதற்கு, மெட்ராஸ் திரைப்படத்தை எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஒரு சுவற்றையும் அதற்கு பின்னால் இருக்கும் சாதி அரசியலையும் தோலுரித்துக் காட்டி கைத்தட்டல்களை பெற்றார் பா ரஞ்சித். இந்த திரைப்படம் பா ரஞ்சித்திற்கு மட்டுமல்ல நடிகர் கார்த்திக்கிற்கும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து, கபாலி காலா என இரண்டு திரைப்படங்களை அவர் கொடுத்தார்.
இதன் பிறகு ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்த பா ரஞ்சித் மீண்டும் தனது திறமையை நிரூபித்து காட்டினார். தற்போது அவர் சீயான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தை எடுத்திருக்கிறார். மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை விக்ரம் மிகப்பெரிய அளவில் நம்பி இருக்கிறார். தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்த அவருக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கோலார் தங்க வயலில் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்த்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகளையே மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளிம்ப்ஸ் காட்சிகள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அனேகமாக தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.





