தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படமானது வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன், திரிஷா, மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய்தத் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படமானது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தினை தர காத்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது முழுவதுமாக முடிந்துள்ள வேளையில் தற்போது அந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் சென்று கொண்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து விரைவில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் லியோ படத்தினை முடித்த கையோடு லண்டன் சென்றுள்ள விஜய் அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் “தளபதி 68” படத்தில் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு “தளபதி 68” படம் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து 1996-ஆம் ஆண்டு “பூவே உனக்காக” என்ற படத்தை இயக்கி விஜய்க்கு முதல் பெரிய வெற்றியை தந்த இயக்குனரான விக்ரமன் விஜய் குறித்து அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பூவே உனக்காக என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்துவிட்டு அதன் பின்னர் ஏன் விஜய்யுடன் அவர் இணையவில்லை என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கேள்விக்கு தற்போது விக்ரமன் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பூவே உனக்காக படத்திற்கு அடுத்து விஜய்யை வைத்து தான் “உன்னை நினைத்து” படத்தின் படப்பிடிப்பை நான் நடத்தினேன். சூர்யாவின் கதாபாத்திரத்தில் அந்த படத்தில் முதலில் நடித்தது விஜய் தான்.
ஆனால் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு விஜய் ஒத்துழைக்கவில்லை. மேலும் கிளைமேக்ஸை மாற்ற வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார். ஆனால் நான் கிளைமேக்ஸ்ஸை மாற்ற முடியாது என்று கூறியதால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து தான் நான் சூர்யாவை வைத்து அந்த படத்தை இயக்கினேன். நானும் விஜயும் சமரசமாக பேசி தான் அந்த படத்தில் இருந்து பிரிந்தோம் அதன் பிறகு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகவே இருந்து வருகிறோம் என விக்ரமன் கூறியது குறிப்பிடத்தக்கது.





