தமிழ் சினிமாவில் 1980 – 90களில் மிகப்பெரிய முன்னணி இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழா படங்களாக இருந்திருக்கின்றன. அவரது படங்கள் எல்லாமே குடும்ப படங்களாக ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.
குறிப்பாக புதுவசந்தம் சூரியவம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக உன்னை நினைத்து வானத்தை போல கோகுலம் நான் பேச நினைப்பதெல்லாம் பிரியமான தோழி என விக்ரமன் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன.
விக்ரமன் படங்கள் பெரும்பாலும் யதார்த்த கதைகளாக இருக்கும். குறிப்பாக ஹீரோ மற்றவர்களுக்கு உதவும், அல்லது மற்றவர்களால் ஏமாற்றப்பட்டும் நல்ல மனிதராக இருப்பார். காமெடி, காதல், குடும்ப சென்டிமென்ட் நிறைய இருக்கும். கதை திரைக்கதை வசனம் அந்த படத்துக்கு பெரிய பக்கபலமாக இருக்கும்.
விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு நடிகர் விஜய் விலகிக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்தில் சூர்யா நடித்தார். சினேகா, லைலா, தலைவாசல் விஜய், பல்லவி, ராம்ஜி, சிங்கமுத்து, சார்லி, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, உன்னை நினைத்து படம் 2ம் பாகமாக எடுக்க ஆசைப்படுகிறேன். அதே டுபாக்கூர் லாட்ஜ், ஏமாற்றும் ஜோசியக்காரர், போலி மருத்துவர், தெரு பாடகர் என அதே கான்செப்ட்டில் அந்த படத்தை 2ம் பாகமாக இயக்க விரும்புகிறேன்.
அந்த படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் 2ம் பாகத்தில் நடிகர் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும். அதே போன்று லாட்ஜ் செட் அமைத்து அதே காட்சியமைப்புகளுடன் மீண்டும் 2ம் பாகத்தை எடுக்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர் முன்வர வேண்டும். இந்த 2ம் பாகம் படத்தில் நடிக்க சந்தானம் சம்மதிக்க வேண்டும். அப்படி எல்லாம் சரியாக வந்தால் உன்னை நினைத்து 2ம் பாகம் எடுக்க விரும்புகிறேன், என்று விக்ரமன் கூறியிருக்கிறார்.





