நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர் தான். அதற்கு பிறகு வந்த வேட்டையன் கூலி ஆகிய படங்கள் ரஜினிக்கு அந்தளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருந்தார். 600 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலை அள்ளியது.
ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டது. இதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்தார். கூலி படத்தை தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் சுமன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். நடிகை தமன்னாவுக்கும் காவலய்யா பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். எனினும் இந்த படத்தில் வி்லலனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன்தான் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருந்தார்.
ஆனால் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விநாயகன் இறந்து போகும் காட்சி இருப்பதால் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜெயிலர் 2 படத்திலும் விநாயகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை நடிகர் விநாகயனே உறுதிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் களம்காவல் என்ற படத்தில் நடிகர் விநாயகன் நடித்திருக்கிறார். அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஜெயிலர் படத்தில் நான் நடித்த வர்மா கேரக்டர் வில்லனாக இருந்தாலும் அந்த கேரக்டரில் உள்ள காமெடித்தனம் எப்போதுமே எனக்கு பிடித்த ஒரு கேரக்டராகி விட்டது என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் ஜெயிலர் 2 படத்தில் அவரது கேரக்டர் என்ன என்பதை அவர் வெளிப்படையாக கூறவில்லை. ஒருவேளை ஜெயிலர் படத்தில் வர்மா கேரக்டர் இறப்பதற்கு முன் அவர் சம்பந்தப்பட்ட வேறு காட்சிகள் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எப்படியிருப்பினும் மீண்டும் வர்மா கேரக்டரில் ரஜினியுடன் விநாயகன் நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.





