நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகனாக அசத்தியவர். குறிப்பாக சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பும், ஆக்ஷனும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் தொடர்ந்து அவரது படங்கள் வெளிவந்தன.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய சக்சஸ் படமாக விஷாலுக்கு அமைந்தது. இதில் கனியன் பூங்குன்றன் கேரக்டரில் அவரை மிஷ்கின் வாழ வைத்திருந்தார். கே பாக்யராஜ், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா என அவர்களது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் எடுக்க முற்பட்ட போது லண்டனில், மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் சண்டை ஏற்பட்டு, படப்பிடிப்பு நின்று போனது. 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த படம் மீண்டும் உருவாகவில்லை. இந்த நேரத்தில் துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி, தயாரிக்கிறேன் என விஷால் அறிவித்தார். அதே கனியன் பூங்குன்றன் கேரக்டரில் விஷால் நடிக்கிறார்.
இப்போது இயக்குனர் ஹரி இயக்கிய ரத்னம் படம் வரும் 26ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தில் முழுவீச்சில் இறங்க இருக்கிறார் நடிகர் விஷால். இதற்காக லண்டன் சென்று சில முக்கிய லொக்கேஷன்களை விஷால் பார்வையிட்டு வந்துள்ளார். இந்த படத்தில் விஷாலின் உதவியாளர் கேரக்டரில், மீண்டும் பிரசன்னா நடிக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில், மார்க் ஆண்டனி மட்டுமே விஷாலுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற படங்கள் எல்லாமே மிக மோசமான பிளாப் படங்களாக அமைந்துவிட்டன. அதனால் நீங்கள் டைரக்ஷன், தயாரிப்பு என்று சென்றுவிடுங்கள், கொஞ்சம் எங்களுக்கு புண்ணியமாக போகும் என்று ரசிகர்கள் விஷாலை கலாய்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இப்போது துப்பறிவாளன் 2 படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க வேண்டிய மற்ற நடிகர்களை, நடிகைகளை, துணை பாத்திர நடிகர்களை விஷாலே, நேரடியாக ஆடிஷன் செய்து தேர்வு செய்து வருகிறார். வழக்கமாக துணை மற்றும் இணை இயக்குனர்கள்தான் இந்த விஷயத்தை செய்வார்கள். அவர்கள் மீது போதிய நம்பிக்கை இல்லாமல் விஷாலே நேரடியாக களத்தில் இறங்கி விட்டாரா, என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.





