நடிகர் விஜய் இப்போது, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி விட்டார். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சிலர் எதிர் விமர்சனம் செய்தாலும் விஜயை பொருத்தவரை, மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலில் குதிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
தற்போது துப்பறிவாளன் 2 படப்பிடிப்புக்கான லொக்கேஷன் பார்ப்பதற்காக நடிகர் விஷால் லண்டன் சென்றிருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகத்தை, டைரக்டர் மிஷ்கின் டைரக்ட் செய்தார். ஆனால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கிய போது, இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, படம் நின்று போனது. அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தை நானே டைரக்ட் செய்து நடிக்கிறேன் என அப்போதே விஷால் அறிவித்த நிலையில், இப்போது அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாக கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.அதனால் அதை மக்கள் நல இயக்கமாக மாற்றினேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை.நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவரின் வாக்குப்படி என்னால் இயன்ற உதவிகளை, நான் செய்துக் கொண்டே தான் இருப்பேன். அதை என்னுடைய கடமையாக நான் மனரீதியாக கருதுகிறேன்.
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக, மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்றும் நடிகர் விஷால் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
நடிகர் விஷால், ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பி, வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலுக்கு அரசியல் ஆர்வம் ஏற்கனவே உள்ள நிலையில், விஜயும் அரசியலுக்கு வந்து விட்டதால் அவரை தொடர்ந்து விஷாலும் வர அதிக வாய்ப்புள்ளது. அதையே, மக்களில் ஒருவனாக எதிர்காலத்தில் குரல் கொடுப்பேன் என்பதை விஷால் சூசகமாக இந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.





