நடிகரும், இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால், 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டிய நாடு, அவன் இவன், பூஜை, துப்பறிவாளன், இரும்புத்திரை என பல்வேறு வெற்றிப் படங்களை அவர் கொடுத்துள்ளார். இது மட்டுமில்லாமல், விஷால் பிலிம் ஃபேக்டரி என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

சமீப காலமாக, விஷாலின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. ஆக்சன், அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய திரைப்படங்கள் வந்த தடம் தெரியாமல் போனதால், தவித்து வரும் அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் 45 வயதான விஷாலுக்கு, 27 வயதான நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. பாண்டிநாடு திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த நிலையில், அப்போதே இருவருக்கும் காதல் பற்றியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திலும் விஷால் – லட்சுமிமேனன் ஜோடி இணைந்தனர். ஆனால் இதன் பிறகு இருவரும் இணைந்து படமே நடிக்கவில்லை. இந்த நிலையில், விஷால் லட்சுமிமேனன் இருவரும் காதலிப்பதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து இருவர் தரப்பிலும் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திருமண தகவல் உண்மைதான் என்று ஒரு தரப்பு கூறிவந்தது. இப்படி இருக்க நடிகர் விஷால், லட்சுமிமேனன் உடன் நான் திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. நான் யாருடன் மணம் முடிக்கப் போகிறேன் என்பதை ஆராய, இது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது நானே எனது திருமணம் குறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.





