தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். வெற்றி, தோல்வி என தனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மேடு பள்ளங்களை சந்தித்தாலும், இப்போதும் ஹீரோவாக நடித்து, அசத்திக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதே போல், நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வெற்றி பெற்ற கதாநாயகனாக இருந்து வருகிறார். அவரை முதலில் இளைய தளபதி என ரசிகர்கள் அழைத்தார்கள். இப்போது தளபதி விஜய் என அழைக்கின்றனர். விஜய்தான் சூப்பர் ஸ்டார் என சிலர் கிளப்பி விட்ட விவகாரத்துக்கு, லியோ வெற்றி விழாவில் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர்தான் என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த சூழலில் லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் கமல் மற்றும் அமீர்கானுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்கள்தான் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என விஷ்ணு விஷாலுக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் ஸ்டார்கள் எப்போதும் ஸ்டார்கள்தான் என அதை திருத்தி, சூப்பர் என்ற எழுத்தை அகற்றி மாற்றி பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் ஒரே காரணத்துக்காக சூப்பர் ஸ்டாராக இருப்பார்கள். நான் என் பதிவை திருத்தியதால், பலவீனம் ஆனதாக நினைக்கவில்லை. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் விரும்புகிறேன். நமக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் சூப்பர் ஸ்டார்கள் என் மரியாதைக்கு அப்பாற்றப்பட்ட சாதனையாளர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போதுதான் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓய்ந்தது. கமல் பிறந்த நாளன்று கமல்ஹாசனுடன், அமீர்கானுடன் நடுவில் நின்று புகைப்படம் எடுத்த விஷ்ணு, அதை மறக்க முடியாத தருணம் என்றோ, மிகச்சிறந்த நடிகர்களுடன் நான் என்றோ எளிதாக குறிப்பிட்டு இருக்கலாம். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து தெரிந்தும், அதை ஏன் குறிப்பிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும். அதுவும் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் நடித்துவிட்டு இந்த சர்ச்சை தேவையா என்கின்றனர் இவருக்கு கமெண்டில் பதில் தந்துள்ள ரசிகர்கள்.





