குறும்பு என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக விஷ்ணுவர்தன் அறிமுகமானாலும், அறிந்தும் அறியாமலும் திரைப்படமே அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ந்து கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கி வந்த அவர், அஜித்துடன் பயணித்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.
அதில் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம். தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த அஜித்திற்கு, பில்லா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. ரஜினியின் பழைய திரைப்படமான பில்லாவையே இதில் ரீமேக் செய்திருந்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
ஆனால், கச்சிதமான திரைக்கதை மற்றும் அஜித்தை மிக ஸ்டைலாக காட்டியதன் மூலம் பில்லா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மலேசியாவில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கோட் சூட் கெட்டப்பில் அடித்து மாஸ் காட்டினார் அஜித். பில்லா திரைப்படத்தின் வெற்றிக்கு, யுவன் சங்கர் ராஜாவின் இசையும் உறுதுணையாக இருந்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் உடன் இணைந்த விஷ்ணுவர்தன் ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. ஆரம்பம் திரைப்படம் சினிமா விநியோகஸ்தர்கள் உட்பட பலருக்கும் லாபத்தை கொடுத்தது.
இதனிடையே சர்வம், யட்சன் என தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன், பாலிவுட் திரை உலகிற்கு சென்றார். அங்கு அவர் இயக்கிய ஷெர்ஷா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராணுவ களத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது.
இந்த நிலையில், அஜித்திடம் தான் கூறிய கதை குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து உள்ளார். அது வரலாற்று பின்னணியில் தொடர்புடைய திரைப்படம். ராஜா மற்றும் போர் சம்பந்தப்பட்ட கதைக்களம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போன்று அதனை இயக்க விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை என்று தெரிவித்தார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், இந்த திரைப்படத்தை எடுத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.





