பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் என்பதால் ரசிகர்கள் திருவிழாவாக இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் வரை திரையிட தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே காலை 9 மணிக்கு கூலி படம் ரிலீஸாகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கு கூலி படம் ரிலீஸ் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அதனால் மாநில எல்லையோர பகுதிளை சேர்ந்த தமிழக ரசிகர்கள் ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களுக்கு சென்று காலை 6 மணி காட்சியை காண ஆர்வமாக உள்ளனர்.
இதற்கிடையே கூலி படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நேற்று வரை 85 கோடி ரூபாயை கடந்துவிட்டதாக கூறப்பட்டது. விஜய் நடித்த லியோ படத்தை காட்டிலும் கூலி படத்தின் முன்பதிவு வசூல் முந்திவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் நாளை முதல் நாளில் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை உலகளவிலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வசூலை கூலி கடந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கூலி படம் ரிலீஸாகும் நாளை 14ம் தேதி, தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்த வார் 2 படமும் வெளியாக உள்ளது. தமிழில் நாளை புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வார் 2 படம் பான் இந்தியா படமாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கூலி படம் மொத்தமே 700 திரையரங்குகளில்தான் வெளியாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட திரைகளில் வார் 2 படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. வார் 2 படம் ரிலீஸ் காரணமாக நாளை கூலி படம் ரிலீஸ் திரைகளின் எண்ணிக்கை 200க்கும் மேல் குறைந்திருப்பது ரஜினி ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
எனினும் தியேட்டர்களை பொருத்த வரை வணிகமே பிரதானம் என்பதால் வார் 2 போன்ற பான் இந்தியா படங்களையும் தமிழ்நாட்டில் திரையிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனினும் கூலி படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தால் வார் 2 படத்தை சில தினங்களில் மாற்றிவிட்டு அந்த 200 தியேட்டர்களிலும் கூலி படமே திரையிடப்படும் என்றும் ரசிகர்கள் ஆறுதலாக கூறி வருகின்றனர்.





