பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம் இது. ஒருமுறை வில்லன் நடிகர் எம்என் நம்பியார், ஒரு கிராமம் வழியாக தனது காரில் சென்றிருக்கிறார். அப்போது நான்கைந்து பேர் அவரது காரை வழிமறித்து செல்லவிடாமல் தடுத்தனர். என்ன தைரியம் இருந்தா எங்க தலைவர் எம்ஜிஆரை நீ அடிப்பே என்று மிரட்டியுள்ளனர்.
அதுக்கு தாம்பா எனக்கு சம்பளம் தர்றாங்க. நான் மட்டுமா எம்ஜிஆரை அடிச்சேன், அவரும்தானே என்னை அடித்தார் என்று நம்பியார் கேட்டதற்கு, அவர் தலைவர். அடிச்சா நீ வாங்கிக்கணும். திருப்பி அடிக்க கூடாது என்று மிரட்டிய தொனியில் பேசிய அவர்களிடம் சமாதானம் பேசி தப்பித்து வந்திருக்கிறார் வில்லன் நடிகர் எம்என் நம்பியார்.
அந்தளவுக்கு சில ஹீரோக்கள் மீது ரசிகர்கள் அதிக அன்பும் அபிமானமும் வைத்திருக்கின்றனர். நம்பியார் எம்ஜிஆரை அடிப்பது, எம்ஜிஆர் நம்பியாரை அடிப்பது எல்லாமே நடிப்புதான் என்றாலும் அதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு எம்ஜிஆர் மீது வெறித்தனமாக அன்பு மரியாதை பற்று கொண்டவர்களாக ரசிகர்கள் அப்போது இருந்திருக்கின்றனர்.
அதே போன்று நடிகர் ரஜினிகாந்த் மீதும் அதீத அன்பும் பற்றும் ரசிகர்களுக்கு இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. ரஜினி மீது மிக தீவிரமான அன்பும் பக்தியும் கொண்ட வெறித்தனமான ரசிகர்கள் இப்போதும் காணப்படுகின்றனர். அவரை தெய்வமாக கொண்டாடும் ரசிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இந்த சூழலில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லி கேரக்டரில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். உண்மையில் அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு ரீச் ஆகியிருக்குமா, என்று சொல்ல முடியாத அளவுக்கு ரஜினியை எதிர்க்கும் ஒரு கேரக்டரில் அவர் அசத்தி இருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது, படையப்பா படத்தில் வாய்ப்பு இருந்திருந்தால், நான் சௌந்தர்யா கேரக்டரில் தான் நடித்திருப்பேன். ஏனென்றால் ரஜினிக்கு வில்லியாக நடிக்க யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். படத்தில் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து போது படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லாம், நீங்கள் கொஞ்ச நாளைக்கு சென்னைக்கு வராமல் இருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அதேபோல் படையப்பா படம் ரிலீஸ் ஆனபோது நான் சென்னையில் இல்லை என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.





