தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயகாந்த், மதுரையில் வளர்ந்தார். அவரது குடும்பம் ரைஸ் மில் வைத்திருக்க, அந்தத் தொழில் செய்யாமல் சினிமா மீதுள்ள ஆசையால் சென்னை வந்து இறங்கினார் விஜயகாந்த்.
ஆனால் ஆரம்பத்தில் அவர் எதிர்கொள்ளாத அவமானங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவு விஜயகாந்தின் கருப்பு நிறத்தை பலரும் கேலி செய்தனர். விஜயராஜ் என்னும் பெயரை படத்திற்காக அவர் விஜயகாந்த் என மாற்றிக் கொள்ள, ஏற்கனவே இங்கு ரஜினிகாந்த் இருக்கிறாரே பிறகு எதற்கு விஜயகாந்த் என்று பலரும் கேள்வி எழுப்பி அவரை மனம் நோகச் செய்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் அகல்விளக்கு எனும் திரைப்படத்தில் அவர் நடித்தார். அப்போது மதிய உணவின் போது, கடும் பசியில் விஜயகாந்த் இருந்திருக்கிறாராம். இலையில் சாப்பாடு வைக்கப்பட்டு அவர் சாப்பிட போகும் நேரத்தில், கதாநாயகி ஷோபா வந்துவிட்டார் என்று கூறி விஜயகாந்தை அங்கிருந்து எழுந்து போகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அவமானமும், பசியும் தான் விஜயகாந்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
திரைத் துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதை புரிந்து கொண்ட அவர், இனி யாரும் பசியுடன் இந்த நிலைமைக்கு ஆளாக கூடாது என முடிவெடுத்து தன்னை நாடி வந்தவருக்கு உணவளித்தார் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் அன்றைய சமயத்தில், நடிகர் நடிகைகள் இயக்குனர்களுக்கு ஒரு வகை சாப்பாடும், உதவி இயக்குனர்களுக்கு இன்னொரு வகை சாப்பாடும், லைட் மேன் களுக்கு சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை அறிந்த விஜயகாந்த், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாட்டைதான் அளிக்க வேண்டும் என்று கூறி செயல்பட வைத்திருக்கிறார். அதன் பிறகு தான் மற்ற திரைப்படங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாம். இது மட்டுமல்லாமல் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை லாபத்திற்கு கொண்டு சென்றார் விஜயகாந்த். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தை சிறப்பாக நடத்தினார்.
இந்நிலையில் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் உடல் நாளை காலை தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அங்கு விஜய்காந்தின் உடல் நாளை பகல் ஒரு மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்படும். பிறகு அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





