ஸ்ரீகாந்த் விஷ்ணு விஷால் நடித்த துரோகி தான் சுதா கொங்கராவின் முதல் திரைப்படம். அது இங்கு ரிலீசானது கூட பல பேருக்கு தெரியாது. இதன் பிறகு தனது உறுதியான வெற்றிக்காக காத்திருந்த சுதா கொங்கரா நிறுத்தி நிதானமாக எடுத்த திரைப்படம் தான் இறுதிச் சுற்று. மாதவன் ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பிறகு அவர் இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. தேசிய விருதையும் தட்டி சென்றது. இதன் பிறகு தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே சுதா கொங்கரா இருந்து வந்த சூழலில், சிம்புவுக்கு அவர் கதை கூறியிருப்பதாகவும் விரைவில் இவர்கள் இணைவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்தார் சுதா கொங்கரா. அவரின் 2டி நிறுவனமே இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட, அதில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வேலைகள் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தன. சூர்யாவும் எதுவும் பேசாமல் நேரடியாக தனது 44 ஆவது திரைப்படத்தில் கவனம் செலுத்த சென்று விட்டார். கார்த்திக் சுப்பராஜ் உடன் அவர் இணைந்து படத்தில் பணிபுரிந்தார்.
இதனால் புறநானூறு திரைப்படம் நின்று போனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் இதற்கான காரணத்தை மட்டும் இரு தரப்பிலிருந்தும் கூறவே இல்லை. இந்த நிலையில் தான் புறநானூறு திரைப்படம் தற்போது சிவகார்த்திகேயன் கையில் சென்று இருக்கிறது. எஸ் கே வின் 25வது திரைப்படமாக உருவாகும் இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.
இதற்கான டெஸ்ட் சூட்டிங்கிலும் அவர் பங்கேற்றார். இப்படியான சூழலில் அவர் படத்தில் இருந்து விலகி இருப்பது உறுதியாகியிருக்கிறது. கூலி படத்தின் பணிகளை முடிப்பதற்கே அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு புறநானூறு திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





