தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள்தான் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். அதனால் தயாரிப்பாளர்களின் நலன் காக்கவும் தயாரிப்பாளர்களின் பிரச்னைகளை களையவும் அவர்களுக்கான வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி 2026 – 2029ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சங்கத் தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது.
சென்னையில் அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடந்தது. இதில் இராம நாராயணன் அணி, நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் களத்தில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,524 பேர் கலந்துக்கொண்டு தங்களது ஓட்டுக்களை பதிவிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்ட நிலையில் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட ஜிகேஎம் தமிழ் குமரன் 788 ஓட்டுக்கள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதுவரை நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக ஓட்டுக்களை பெற்றவர் என்ற பெருமை தமிழ் குமரனுக்கு கிடைத்துள்ளது.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இணைச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போதைய சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் ஜிகேஎம் தமிழ் குமரன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் வரும் 2029ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 788 ஓட்டுகள் என மிக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர் ஜிகேஎம் தமிழ்குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.





