புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது படங்களில் புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார். ஏனென்றால் தனது ரசிகர்களுக்கும் அந்த தீய பழக்கங்கள் வந்துவிடக் கூடாது என்ற அன்பும் அக்கறையும்தான் அதற்கு காரணம். அதே போல் எம்ஜிஆர் முன்னிலையில் யாரும் சிகரெட் பிடிக்க மாட்டார்கள். அவர் மீது அவ்வளவு பயம் மரியாதை இருந்தது.
ஒருமுறை ஸ்டுடியோ ஒன்றில் இருந்த மேக்கப் அறைக்கு எம்ஜிஆர் சென்ற போது அங்கு 2 நடிகர்கள் குடிபோதையில் படுத்து தூங்குவதை பார்த்து எம்ஜிஆர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். அதே போல் மற்றொரு முறை தனது மேக்கப் அறையில் மதுபாட்டிலும் டம்ளரும் இருப்பதை பார்த்தும் அப்செட் ஆனார்.
உடனே அங்கிருந்த ஸ்டுடியோ ஊழியரை அழைத்து இதுகுறித்து கண்டித்தார். அப்போது நேற்றிரவு நடந்த படப்பிடிப்பில் நடிகை ஒருவர் இந்த அறையில் அமர்ந்து மதுபானம் அருந்தியதாகவும் அவரது தாயார் அருகில் இருந்து மதுவை நடிகைக்கு ஊற்றிக் கொடுத்ததாகவும் அதை நான் பார்த்தேன் என்றும் அந்த ஊழியர் கூறினார்.
உடனே அந்த ஊழியரிடம், ஸ்டுடியோ உரிமையாளருக்கு எம்ஜிஆர் ஒரு கடிதம் எழுதினார். அதில் தொழில் செய்யும் இடம் கோவில் போன்றது. அதில் இதுபோன்ற தீய செயல்கள் நடந்தால் அது ஸ்டுடியோவுக்கும் உங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே இங்கு மது அருந்த அனுமதிக்காதீர்கள் என்று எழுதி அந்த ஊழியரிடம் கடிதத்ததை கொடுத்து அனுப்பினார்.
சில நிமிடங்களில், அந்த கடிதத்துடன் ஊழியரை அழைத்துக்கொண்டு அங்கு எம்ஜிஆரின் மேக்கப் மேன் வந்திருக்கிறார். அப்போது ஏன் என்று எம்ஜிஆர் மேக்கப் மேனிடம் கேட்ட போது, அண்ணே நீங்கள் இப்படி ஒரு கடிதம் தந்தால் இந்த ஊழியரின் வேலை தான் உடனே பறி போகும். பாவம் இவன் குடும்பஸ்தன்.
ஏன் காலி மதுபாட்டிலை டம்ளர்களை எடுத்து விட்டு எம்ஜிஆர் வருவதற்குள் அறையை சுத்தம் செய்து வைக்கவில்லை என்று இவரை தான் வேலையை விட்டு உடனே தூக்குவார்கள் என்று கூறினார். அவர் சொன்ன உண்மையை புரிந்துக்கொண்ட எம்ஜிஆர் அந்த கடிதத்தை வாங்கி உடனே கிழித்து எறிந்து விட்டார். தவறு செய்தது இங்கு பெரிய விஷயமில்லை. அதற்கு தண்டனை இல்லை. தவறு செய்ததை மறைக்காமல் விட்டால்தான் பெரிய தண்டனை என்பதை எம்ஜிஆர் அப்போது புரிந்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.





