இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சகோதரி ரெஹானா மகன் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இளம் வயதிலேயே முறைப்படி இசை கற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டினார். இவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தொடர்ந்து கிரீடம், ஆயிரத்தில் ஒருவன், குசேலன், காளை, தலைவா, சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். இவர் இசையமைத்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைபெற்றன.
தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் மாறினார். டார்லிங், செம, பேச்சுலர், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பென்சில், ஜெயிலர், சிவப்பு மஞ்சள் பச்சை, திரிஷா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, குப்பத்து ராஜா, நாச்சியார், டியர் உள்ளிட்ட பல படங்களில் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்தார்.
அவர் கதாநாயகனாக நடித்த படங்களும் ஓரளவு வெற்றியை பெற்றன. இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் ஓரளவு லாபமும் சம்பாதித்ததால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது. எனினும் இசையமைப்பாளராகவும் அவர் அசத்தினார். சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இசை அமைப்பதற்காக ஜி வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி என்ற பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார். கடந்த சில தினங்களாக ஜிவி பிரகாஷ் குமாரும் அவரது மனைவி சைந்தவியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவியது.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அவர்களது பிரிவை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் 11 வருட திருமண வாழ்க்கைக்கு பின், சமரசமாக பிரிய முடிவெடுத்து இருக்கிறோம். எங்கள் மனநிம்மதிக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். மீடியா மற்றும் நண்பர்கள் இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் குமார், அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





