சினிமாவில் நடிப்பது என்றால், பலருக்கும் ஆசைதான். சிலர் அந்த லட்சியத்தோடு தான் வளரவே செய்கிறார்கள். சிறுவயதில் இருந்தே சினிமா நடிகராகும் கனவுகளோடு பலரும் தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் நடிப்பில் சாதித்தும் இருக்கிறார்கள்.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் நடிப்பு திறமை இருந்தால் மட்டுமே நடிகராக முடியும். சினிமாவுக்குள் நுழைவது என்பது குதிரைக்கொம்பு போன்ற ஒரு அரிதான விஷயம். அவ்வளவு எளிதாக அந்த வாய்ப்பு என்பது அமைந்து விடாது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ள தனது திறமையை வெளிப்படுத்த அவர்கள் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். கடுமையாக உழைத்து, படங்களில் அதை நடிப்பில் பிரதிபலிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களால் சினிமாவில் தொடர்ந்து நிற்க முடியும். பல படங்களில் நிலைத்து நின்று, பெரிய நடிகராக ஒரு அங்கீகாரத்தை ரசிகர்கள் மத்தியில் பெற முடியும். இல்லை என்றால் அவர்களால் சினிமாவில் சில படங்களிலேயே வெளியேறி விட வேண்டியதுதான்.
ஆனால் இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் மகன்கள் மிக எளிதாக நடிகர்களாகி விடுகின்றனர். குறிப்பாக தொழிலதிபர்கள் கூட தங்களிடம் கரன்ஸி குவிந்து கிடப்பதால் அவர்களே படம் தயாரித்து நடித்தும் விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபர்கள் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி. சரவணன் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் படம், 2022ம் ஆண்டில் வெளியானது.
இப்போது சூரி நடித்த கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்க இருக்கிறது. கதை, திரைக்கதை என ஸ்கிரிப்ட் ரெடியாக உள்ளது. ஹீரோ, டைரக்டரும் அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு ரெடியாகி விட்டனர்.
ஆனால் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க இன்னும் ஹீரோயின் மட்டும் யாரென தெரியவில்லை. ஹீரோயினை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னட மொழி நாயகிகள் எவரேனும் களத்தில் இறக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் தமிழில் இவர் ஏற்கனவே நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்பட்டு, அவர் நடிக்க மறுத்து விட்டார். ஏனெனில் தமிழ் தவிர மற்ற மொழி நடிகைகளுக்குதான் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.





