தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு கவிஞராக இருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து. வைகறை மேகங்கள் கவிதை நூல் மூலம் தன்னை கவிஞராக அறிமுகப்படுத்திய வைரமுத்து, இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் திரைப்பட பாடல் ஆசிரியராகவும் தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதுவரை பல ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்.
பலமுறை தேசிய விருதுகளை வென்ற கவிஞர் வைரமுத்துவுக்கு எப்போதுமே விருதுகளால் பெருமையல்ல. அவரது எழுத்துகளும் சிந்தனைகளும்தான் அந்த விருதுகளுக்கே பெருமை தந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் 3ம் உலகப்போர் தண்ணீர் தேசம் மீண்டும் என் தொட்டிலுக்கு என அவர் படைத்த படைப்பிலக்கியங்கள் அவரது காலம் கடந்தும் அவரது பெருமை பேசும் என்பதே நிதர்சனம்.
தனிப்பட்ட முறையில் மனிதர்கள் மீது விழும் விமர்சன கல்லடிகளுக்கு வைரமுத்துவும் விதிவிலக்கு அல்ல. அவர் மீதும் சில கடும் விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு கவிஞராக ஒரு பாடல் ஆசிரியராக ஒரு எழுத்தாளராக இலக்கியவாதியாக வைரமுத்து எப்போதுமே போற்றப்பட வேண்டிய ஒரு கலைஞர்தான்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு வள்ளுவர் மறை- வைரமுத்து உரை என்ற நூலை எழுதியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக திருக்குறளின் முப்பாலுக்கும் கவிஞர் வைரமுத்து உரை எழுதி வந்தார். அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த நூலுக்கு வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, வள்ளுவர் மறை வைரமுத்து உரை அச்சுப்பணி நிறைவடைந்து விட்டது. எனது 40ம் நூல் இது. இதன் முன்னுரையை நான் முனைந்து எழுதி இருக்கிறேன். 13 பக்கங்களில் இயங்குகிறது எனது நீண்ட முன்னுரை. வள்ளுவர் காற்றை போல் பொதுவானவர். காற்றில் யாரும் சாயம் அடிக்க முடியாது.
எந்த பழமை வாதமும் காற்றை பூட்டி வைக்க இயலாது. மறைக்க முடியாத சான்றுகளும் மறக்க முடியாத தரவுகளும் மொய்த்துக் கிடக்கின்றன முன்னுரையில். வள்ளுவம் உலகப் பொதுமறை என்று உலகத்தமிழர்கள் உரக்க சொல்வதற்கு எனது முன்னுரையே வாளும் ஆகும், கேடயமும் ஆகும் என்று வைரமுத்து அதில் தெரிவித்திருக்கிறார். வருகிற ஜூலை 13ம் தேதி வள்ளுவர் மறை – வைரமுத்து உரை நூல் வெளியிடப்படுகிறது. திருக்குறளுக்கு உரை எழுதிய 23வது தமிழ் உரை ஆசிரியர் வைரமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.





